சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “1840-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரி இது. பொதுவாக பல்கலைக்கழகத்தின் கீழ்தான் அனைத்து கல்லூரிகளும் வரும். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே, தொடங்கப்பட்டதுதான் இந்த மாநிலக் கல்லூரி. இந்த கல்லூரி தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் கழித்துதான், சென்னைப் பல்கலைக்கழகமே தொடங்கப்பட்டது. எனவே இதனை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாய் நிறுவனம் என்று கூறுவார்கள். இந்த கல்லூரியில் படித்த உங்களின் எதிர்காலம் சிறப்பாகத்தான் அமையும்.
பெரும்பாலும் முதல்தலைமுறை பட்டதாரிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்கள், புறநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் படிக்கின்ற கல்லூரி, என்ற வகையில் சமூகநீதி கல்லூரியாக இந்த கல்லூரி அமைந்திருப்பது மகிழ்ச்சி. இந்த கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தைதான் மிக மிக முக்கியமானதாக நான் பார்க்கிறேன்.
பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள் 94 பேரும், செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு கொண்ட 200-க்கும் மேற்பட்டவர்களும் இங்கு படித்து வருகின்றனர். இவர்களுக்காக பி.காம், பிசிஏ உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் இவை தொடங்கப்பட்டது என்பது பெருமைக்குரிய ஒன்று. செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது எம்.காம், படிப்பிற்கு தற்போது தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்தியாவில் இப்படி ஒரு வாய்ப்பு எந்த மாநிலத்திலும் கிடையாது. மாற்றுத்திறனாளிகள் கல்விக்கு உதவுவது மூலமாக, மாநிலக் கல்லூரி மனிதநேய கல்லூரியாகவும் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் வந்து இங்கு தங்கி படித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்து தரப்படும். முதற்கட்டமாக இந்த இரண்டு அறிவிப்புகளையும் மாநிலக் கல்லூரி கல்வித் தொண்டுக்காக நான் அறிவிக்க விரும்புகிறேன்.
அனைத்து வாய்ப்புகளையும் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான், திராவிட இயக்கம். சமூக நீதி என்ற தத்துவமே பிள்ளைகளின் கல்விக்காகத்தான், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகத்தன் உருவாக்கப்பட்டது. சாமானியர்களை கைத்தூக்கி விடக்கூடிய சமூகநீதிக் கொள்கை, எல்லா இடத்திலும் செழித்துவரக்கூடிய அந்த வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்கள் அதிகளவில் கல்வி கற்க வேண்டும். பெண்களுக்கு தன்னம்பிக்கை, தைரியத்தை கல்வி வழங்குகிறது.
கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறை துள்ளி எழுந்துள்ளது. உயர் கல்வித் துறை புதிய உத்வேகத்தோடு நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. கடைக்கோடி மனிதரையும் கல்விபெற வைத்து, உலக சமுதாயத்தின் போட்டிக் களத்தில் அவர்களையும் போட்டியாளர்களாக மாற்றும் ஆட்சிதான், இந்த ஆட்சி. அவர்களை வெற்றியாளர்களாக மாற்றக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி” என்று அவர் பேசினார்.