பாதி மயங்கிய நிலையில் இருந்த ஜான், தனக்கு தண்ணீர் கொடுத்த அதிகாரியிடமிருந்து தண்ணீரை வாங்கி படபடத்து தடுமாறிய தன் கைகளை கட்டுப்படுத்தி தண்ணீரை குடிக்க முயற்சித்தபோது மரணபடுக்கையில் தனது மகள் கடைசியாக தன்னிடம் தண்ணீர் வாங்கி குடித்த நினைவு கண்முன்னே வந்து துக்கம் தொண்டையை அடைத்தது.
ஜானின் மகள் ஆசையாக கேட்டு வாங்கி வளர்த்த நாய் “சூசி”. தன் மகளின் நினைவாக தன்னிடம் கடைசியாக இருக்கும் நினைவுப்பற்று ”சூசி” மட்டுமே. அதற்கு எதுவும் ஆகக்கூடது என்று ஜானுக்கு கவலையாக இருந்தது. இருப்பினும் கஷ்டப்பட்டு தண்ணீரை குடித்த ஜான் சற்று தெளிவானார். உடனே அந்த அதிகாரி ‘கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க இதோ வந்து விடுகிறேன்’ என்று கூறி விட்டு மீட்டிங் ஹாலை விட்டு வெளியேறி முதல் தளத்திற்கு வந்து கமிஷனரின் உதவியாளரிடம் நடந்ததைக் கூறினார்.
அந்த அதிகாரி கூறியதைக் கேட்ட கமிஷனரின் உதவியாளர் உடனடியாக வரவேற்பறைக்கு செய்தியை தெரிவித்து மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வழிவகை செய்தார். ஐந்து நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வாகனம் தயாராக கமிஷனர் அலுவலக வாசலில் நின்றது.
கமிஷனரின் உதவியாளரும், அந்த அதிகாரியும் அங்கிருந்து மேலும் இரண்டு அதிகாரிகளும் ஜானியை கைத்தாங்கலாக ஹாலில் இருந்து அழைத்து வந்து தயாராக நின்ற வாகனத்தில் அமர வைத்தனர். இருள் பயந்த ஜானின் கண்களில் லேசாக ஒளி வர ஆரம்பித்தது. அதுவரை நடந்த எதுவும் ஜானின் நினைவில் முழுமையாக பதியவில்லை.
‘சரி யாராவது ஒரு ஆள் கூட போயிட்டு வாங்க’ என்று வரவேற்பறையில் இருந்த ஒரு அதிகாரி கூற ‘சட்டென்று இதோ நான் சென்று வருகிறேன்’ என்று கூறி புறப்பட தயாராக இருந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தார் முத்து.
கமிஷனர் அலுவலகத்தில் வாகன ஓட்டியாக பணிபுரிபவர் தான் முத்து. ஜான் காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த போது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் முத்து.
முத்து ஏறி அமர்ந்தவுடன் வாகனம் மருத்துவமனை நோக்கி புறப்பட்டது. வண்டி புறப்பட்டு சரியாக ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து தெளிவு பெற்றார். இருண்டு இருந்த அவரின் கண்களில் முழுமையாக ஒளி வந்தது. முழு சுயநினைவிற்கு வந்த ஜான் கண் திறந்து பார்த்த முதல் மனிதர் முத்து.
ஜான் தெளிவு பெறுவதை கவனித்துக்கொண்டிருந்த முத்து ‘என்ன ஜான் இப்ப எப்படி இருக்கு’ என்று கேட்டவர் குரலை அடையாளம் கண்டு கொண்ட ஜான் ‘என்ன முத்து சார் நீங்க எப்படி இங்கே’ என்று மெதுவான குரலில் கேட்டார்.
‘காலைல தான் வந்தேன். எனக்கு மீண்டும் இங்கே டிரான்ஸ்பர் ஆகிவிட்டது. ஃபேமிலி எல்லாம் ரெண்டு நாள் கழிச்சு வருவாங்க’ என்று கூறினார் முத்து. பழைய நண்பரை பார்த்த சந்தோஷத்தில் ஜானின் முகத்தில் புன்னகை பூத்தது. வாகனமும் மருத்துவமனையை அடைந்தது.
வீட்டில் ஜானின் மனைவி டாக்டரின் வருகைக்காக காத்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார். தன் கணவர் கமிஷனர் ஆபீசில் இருப்பதை தெரிவித்ததால் மீண்டும் கணவருக்கு போன் செய்ய மனம் வராமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
அரை மணி நேரத்தை கஷ்டப்பட்டு கடந்த கிறிஸ்டினா வீட்டின் முன் வாகன சத்தத்தை கேட்டு எழுந்து வெளியே வந்தார். வெளியே வந்த கிறிஸ்டினா அவருக்கு சற்று நிம்மதி பெருமூச்சு, வந்திருப்பது டாக்டரின் வாகனம். உடனடியாக வாகனத்தின் அருகில் சென்ற கிறிஸ்டினா டாக்டரை பார்த்து ‘டாக்டர் ப்ளீஸ் கம் ஃபாஸ்ட்’ என்று படபடத்தார். என்ன நடந்திருக்கும் என்று ஓரளவுக்கு டாக்டரால் யூகிக்க முடிந்தது. எஸ் மேடம் சூசி எங்கே என்று கேட்டார். இதோ இங்கேதான் ஹாலிலேயே இருக்கிறது என்று கூறி வீட்டிற்குள் நடந்தார் கிறிஸ்டினா.
கிருஷ்ணாவை பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற டாக்டர் அங்கே பாதி மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த செல்லப்பிராணியை பரிசோதித்து பார்த்தார். டாக்டர் என்ன கூற போகிறாரோ என்று பதட்டமாகவே இருந்த கிறிஸ்டினா “என்ன ஆச்சு டாக்டர் ஏதாவது பிரச்சனையா’’ என்று கேட்டார். மெல்லிய புன்னகையுடன் ‘நீங்க பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை மேடம் இது ஒரு சின்ன ஃபுட் பாய்சன்’ சீக்கிரமே சரியாயிடும் நான் மருந்து கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு, தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு ஊசியை எடுத்து போட்டார் டாக்டர். காலையில என்ன உணவு கொடுத்தீர்கள் என்று கேட்ட டாக்டரிடம் ‘நைட்ல இருந்து எதுவுமே சாப்பிடவில்லை’ என்று கூறினார் கிறிஸ்டினா.
‘பரவால்ல மேடம். அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல நான் எழுதி தரும் மாத்திரையை சாப்பாட்டில் கலந்து மதியத்திற்கும் இரவிற்கும் வையுங்க காலையில் எப்படி இருக்கிறது என்று எனக்கு போன் பண்ண சொல்லுங்க நானும் சார்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி விடுகிறேன்’ என்று போனை கையில் எடுத்தார் டாக்டர். உடனே கிறிஸ்டினா ‘சார் அவங்க கமிஷனர் ஆபீஸ்க்கு மீட்டிங்கு போயிருக்காங்க. உங்கள போன் பண்ண வேண்டாம்னு சொல்ல சொன்னாங்க. அவர் வந்ததும் நான் உங்களை வந்து பார்க்க சொல்கிறேன்’ என்றார்.
‘ஓகே மேடம்’ என்று போனை வைத்துவிட்டு மருந்து எழுதி கொடுக்கும் சீட்டை எடுத்து செல்லபிராணிக்கு தேவையான மருந்துகளை எழுதிக்கொடுத்துவிட்டு ‘பயப்படாதீங்க மேடம் ஒன்னும் ஆகாது. சீக்கிரமே சரியாகிவிடும்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் டாக்டர்.
வீட்டின் ஞாபகமாகவே இருந்த ஜான் சற்று தெளிவு பெற்றதும் தன் கைப்பேசியை எடுத்து தன் மனைவிக்கு போன் செய்தார். ஜான் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று போனை கையில் வைத்திருந்த கிறிஸ்டினா ஜானின் அழைப்பு வந்த மறுநொடியே அழைப்பை ஏற்று ‘டாக்டர் வந்துட்டு போயிட்டாங்க ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க எந்த கவலையும் இல்லாமல் இருங்க என்று கூறினார். தன் எண்ண ஓட்டத்தை நன்றாக புரிந்து கொண்ட மனைவி தனக்கு கிடைத்த வரம் என்று எண்ணியதால் மெல்லிய புன்னகையுடன் ‘ஓகெ டீனா’ மற்றதை வீட்டிற்கு வந்து பேசுவோம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார் ஜான்.
(தொடரும்…)