ஒரு மனிதனின் வாழ்வில் மகத்தான சாதனை படைப்பதற்கு வாழ்வில் வளர்ச்சி அடைவதற்கு மிகவும் உதவியாக, உறுதுணையாக இருப்பது நம்பிக்கையே ஆகும்.
நம்பிக்கை என்பது ஒவ்வொரு வெற்றியாளருக்கும், வாழ்வில் சாதித்த சரித்திரம் படைத்த அனைத்து சாதனையாளர்களும் உள்ள அடிப்படை குணமாகும்.
அய்யன் திருவள்ளுவர் கூறியது போல…
ஒல்வது அறிவது அறிந்து அதன்கண் தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்”
ஒருவர் தன் வலிமைக்கு ஏற்றதை அறிந்து, அதில் உறுதியாக செயல்படும்போது அவரால் முடியாதது எதுவும் இருக்காது. “முயன்றால் முடியாதது எதுவும் இல்லை”, “முயற்சி திருவினை ஆக்கும்”, முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்” என்பவைகள்தான் தன்னம்பிக்கையின் மூல மந்திரங்கள் ஆகும்.
பொதுவாக கால்நடைகள் குட்டிகளை ஈன்றவுடன் பிறந்த குட்டிகள் தடுமாறி எழுந்து நின்று தன்னம்பிக்கையுடன் நடக்க ஆரம்பித்துவிடுகின்றன. அதுபோல் பறவையினங்களின் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் சிறிது காலத்திலேயே பறக்க ஆரம்பிக்கின்றன. ஆனால் மனிதன் தாத்தா சொத்து, பாட்டன் சொத்து என்று வழக்கு மீது வழக்கு போட்டு காசேதான் கடவுளப்பா என்கிற மனப்பான்மையில் காட்டுமிராண்டியாக மனித நேயமற்ற செயல்களான கொலை, கொள்ளை, வழிப்பறி, பணமோசடி, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் சாதனை மனிதர்கள் சென்ற வழித்தடத்தை பார்த்து அல்லது அவர்கள் வாழ்வில் சந்தித்த சவால்களை, சோதனைகளை, கடினமான தருணங்களை நாம் தெரிந்து கொள்வதன் மூலமாக, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதன் மூலமாக அவரவர் மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம்.!!!
இன்றைய மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கமானது அரிதாகிவிட்டது, தன்னம்பிக்கை இல்லாமல் தடுமாறி தடம்மாறி வாழ்வில் தோற்றுப்போய் விடுகிறார்கள்.
வியர்வை சிந்தும் நேரத்தில் வியர்வை சிந்தாமல், உழைக்கின்ற நேரத்தில் உழைக்காமல் தவறான பாதையில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
மது, சிகரெட், கஞ்சா போன்ற போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி தீய வழியில் செல்லும் மாணவர்கள் இன்றைய சமூக சூழலில் பெருகிவிட்டார்கள், பெற்றோரை, பெரியோர்களை ஆசிரியர்களை மதிக்காத சமூகம் உருவாகிவிட்டது.
அதை தடுக்கும் நோக்கத்தில், நாளைய தலைமுறையை நல்வழிப்படுத்தும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு என்கிற கட்டுரையானது நுண்ணறிவு புலனாய்வு மாத இதழின் ஆசிரியர் திரு.சிவகுமார் அவர்களின் தூண்டுதலின் பேரில் உந்துதலின் பேரில் மாதம் தோறும் வெளிவருகிறது.
சமீபத்தில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தது அதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சில பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிற செய்தியை நாளேடுகளிலும் தொலைக்காட்சி வாயிலாகவும் காண நேரிட்டது.
வாழ்க்கையைப் பற்றி புரிதல் இல்லாத சமுதாயமாக இன்றைய சமுதாயம் உள்ளது குறிப்பாக இன்றைய இளைஞர்கள் பகலில் எரியும் விளக்காக எதற்குமே பயன்படாமல் இச்சமுதாயத்திற்கு எவ்வித நன்மையை செய்யாமல் பயனற்று வாழ்கிறார்கள், மதிப்பெண் குறைவதற்கு பயந்து, தோல்விகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள், வாழ்வின் எதார்த்தத்தை தெரிந்துகொள்ளாமல் விதைத்த உடனே அடுத்த நொடியில் அறுவடைக்கு ஆசைப்படுகிறார்கள், எந்த ஒரு செயலிலும் உடனே அதற்கான பலன் கிடைக்க வேண்டும் என்று எண்ணி தப்புக்கணக்கு போடுகிறார்கள்.
மனிதனுக்கு ஆறறிவு என்று எல்லோரும் சொல்லிக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் ஆனால் விலங்குகளுக்கு உள்ள அறிவு, மதிநுட்பம் மனிதனுக்கு உண்டா என்று பார்க்கும் பொழுது விலங்குகளை காட்டிலும் மனிதனுக்கு குறைவே ஆகும்.
எடுத்துக்காட்டாக ஒரு சிலந்தியின் முயற்சியை நீங்கள் எண்ணிப் பாருங்கள், வலையைப் பின்னும் சிலந்தி தனக்குரிய வலையைப் பின்னி முடிப்பதற்குள் எத்தனை முறை வலை அறுந்தாலும் விடா முயற்சியை மேற்கொண்டு சிலந்தி வலையை வெற்றிகரமாக கட்டி முடிப்பதை, அது திரும்ப திரும்ப முயற்சி மேற்கொள்வதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
வலையைக் கட்டி முடிக்கும் வரை சிலந்திக்கு சோர்வோ அலுப்போ ஏற்படுவதில்லை. திரும்பத்திரும்ப நூல் அறுபடும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வலையை பின்னிக்கொண்டே இருக்கும். அந்த வலை பின்னி முடிக்கும்வரை அது ஓய்வதில்லை.
நம்பிக்கை பற்றிய ஒரு சிறிய கதை
காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார் ஒரு முனிவர் அப்பொழுது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புண்ணியம் உள்ளது என்றது எலி.
உடனே ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது, ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார்.
என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கோட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழிந்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகின்றான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுங்கள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்
என்பதை மனதில் வைத்து நம்பிக்கையை மனதில் விதைத்து நாள்தோறும் உங்கள் லட்சியத்தை நோக்கி போராடுங்கள் கடினமாக உழையுங்கள் உங்களுக்கும் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு தொடரும்..
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
செல்: 7598534851