உட்பிரிவு பட்டாக்கள் தொடர்பான விண்ணப்பங்களை கிராம நிர்வாக அதிகாரிகள் நிராகரித்தாலும், அவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்களை ஈடுபடுத்தி உட்பிரிவு செய்து பட்டா வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் டி.ஜி.வினய் வெளியிட்ட உத்தரவு:
உட்பிரிவு தொடர்பான மனுக்கள் கிராமம் வாரியாக, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்குச் சென்றடையும். கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், தணிக்கை செய்யவும் ஏதுவாக அவற்றை வரிசைப்படுத்த வேண்டும். தணிக்கைக்கான தேதியை குறிப்பிட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தணிக்கை செய்யப்படும் நாளில் மனுதாரர் முன்னிலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தணிக்கைப் பணிகள் முடிவுற்ற பிறகு, கோப்புகள் தயார் செய்து வட்ட துணை ஆய்வாளரின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் சுயமாக அளவைப் பணி செய்து உட்பிரிவு ஆவணங்கள் தயார் செய்யப்படுவதை சார் ஆய்வாளர்கள், வட்ட துணை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களால் தள்ளுபடி செய்யப்படும் மனுக்கள் அனைத்தும் வட்ட சார் ஆய்வாளர் அல்லது வட்ட துணை ஆய்வாளரால் முழுமையாக தணிக்கை செய்யப்பட வேண்டும். புலத்தணிக்கையின் போது தவறுகள் கண்டறியப்பட்டால், அதன் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலருக்கு தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். அவற்றைத் திருத்தம் செய்ய உரிய அறிவுரைகளையும் வழங்க வேண்டும்.
பதிவேடுகள் பராமரிப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பிரிவு செய்யும் கோப்புகள் தொடர்பாக ஒரு தனி பதிவேடு பராமரிக்க வேண்டும். இதனை ஆய்வாளர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் அவ்வப்போது தணிக்கை செய்ய வேண்டும். உட்பிரிவு பட்டா வழங்குதல் போன்ற பணிகளை வருவாய் கோட்டாட்சியர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். மாதந்தோறும் கிராம நிர்வாக அலுவலரால் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை தணிக்கை செய்தும், அதன் அடிப்படையிலான அறிக்கையை மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு அனுப்பியும் வைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.