நவீன வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடும் தமிழக அரசு , இ-வாடகை திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளது. டிராக்டர் மட்டுமின்றி இதர வேளாண் கருவிகளும் இந்த திட்டத்தின் கீழ் வாடகைக்கு விடப்படுவதால் இதனை பயன்படுத்தி விவசாயிகள் பலன் பெறலாம்.
மேலும் இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் இருந்தே ‘உழவன்’ செயலி மூலம் முன்பதிவு செய்து பெற்று கொள்ளும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி அறிமுகம் செய்து வைத்தது. அந்தவகையில் வேளாண்மை பொறியியல் துறையிடம் இருந்து 487 நிலமேம்பாட்டு இயந்திரங்கள், 1,226 சிறுபாசன திட்ட இயந்திரங்கள் குறைந்த வாடகையில் விவசாயிகள் பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டத்தை தற்போது விரிவுபடுத்தியுள்ள தமிழக அரசு 185 ட்ராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள், 185 கொத்துக்கலப்பைகள் ஆகியவையும் வேளாண் பொறியியல் துறையால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது இதில் நில மேம்பட்டு இயந்திரங்களான புல்டோசர் ஒன்றை ஒரு மணி நேரத்திற்கு ரூ. 970 கொடுத்து விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். ட்ராக்டர், மினி ட்ராக்டர் ஆகியற்றை ரூ. 400 செலுத்தி பெற்று கொள்ளலாம். சக்கர வகை நெல் அறுவடை இயந்திரத்தை ரூ. 1,010க்கும், ட்ரக் வகை நெல் அறுவடை இயந்திரத்தை ரூ. 1,630க்கும் பெற்று கொள்ளலாம்.
மேலும் கரும்பு அறுவடை செய்யும் இயந்திரத்தை ரூ.4,450க்கும், வாகனத்துடன் இயங்க கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை ரூ. 650க்கும் வாடகைக்கு பெற்று கொள்ளலாம். மேலும் சிறு பாசன திட்ட கருவிகளான சுழல் விசைத்துளை கருவிகள் (1 மீட்டருக்கு ரூ.130) , கைத்துளை கருவிகள் (1 மீட்டருக்கு ரூ.30) , சிறு விசைத்துளை கருவிகள் (1 மீட்டருக்கு ரூ.70), பெர்குஷன் துளை கருவிகள் (நாள் ஒன்றுக்கு ரூ.300), பாறை வெடி கருவிகள் (1 வெடிப்பிற்கு ரூ.250) , நிலத்தடி ஆய்வு கருவிகள் (1 ஆய்விற்கு ரூ.500), மின்னியல் ஆய்வு கருவிகள் (1 துளை கிணறுக்கு ரூ.1000)க்கும் வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.