தோழா.!!!
தோல்விகளை தோற்கடி
தற்கொலை எண்ணத்தையாக்கு
நீ தவிடுபொடி.
இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லை…
பணம் மட்டும்தான் வாழ்க்கை என்கிற மனப்பான்மையில் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதால் கடிவாளம் கட்டிய குதிரையாக தொலைநோக்குப் பார்வை சிறிதும் இல்லாமல் வாழ்வில் உண்டாகும் சவால்களை கண்டு துவண்டு போய் விடுகிறார்கள்…
தோல்விகளுக்கு பயந்து சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்… அதிலும் குறிப்பாக சென்ற மாதம் மட்டும் நான்கு ஐந்து மாணவிகள் தோல்விகளை கண்டு வாழ்வில் உண்டாகும் சவால்களை எதிர்க்க மனமில்லாமல் தற்கொலையை செய்து கொண்டார்கள் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான பல்வேறு காரணங்கள் இருந்த போதும் என்னை பொருத்தவரை இன்றைய சமூகத்தில் வாழும் பெரும்பாலான மக்களின் மனநிலையானது பணம் மட்டுமே பிரதானம் என்கிற மனப்பான்மையானது பெரும்பாலும் உள்ளதே ஆகும்..
வாழ்வில் சாதித்த சரித்திரம் படைத்த சாதனையாளர்களின் வாழ்க்கையை செய்தித் தாள்களிலும் நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் தேட வேண்டியதாக உள்ளது.
தன்னம்பிக்கை சார்ந்த செய்திகளை இன்றைய இளம் தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் சினிமா சார்ந்த செய்திகளை மட்டுமே முக்கிய செய்தியாக லாப நோக்கத்தில் செயல்படும் பொறுப்பற்ற ஊடகங்களும் அதற்கு உறுதுணையாக உள்ளன..
தற்கொலைகள் பெருகுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இன்றைய மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாததே ஆகும் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் பள்ளி படிப்பை மட்டுமே நம்பி மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என பெற்றோர்களின் பேராசையை பிள்ளைகள் மீது திணிப்பதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதே நடைமுறை உண்மையாகும்…
மேலும் வெறும் படிப்பு மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வில் செல்வத்தை, செழிப்பை, சிறப்பை, பதவியை, பட்டத்தை, சமூக அங்கீகாரத்தை, உயர்ந்த நிலையை தருவதில்லை… வாழ்வில் சாதித்த சாதனையாளர்கள் அனைவரையும் நீங்கள் சற்று உற்று நோக்கி பார்த்தால் வெறும் படிப்பை மட்டுமே அவர்கள் மூலதனமாக கொள்ளாமல் அந்த நிலையை அடைந்தார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் அறிந்து கொள்வீர்கள்…
படித்ததனால் அறிவுப்போற்றோர் ஆயிரம் உண்டு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்பதை இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள மறுக்கிறார்கள்…
நன்கு படிக்க வேண்டும், அதிக மதிப்பெண் பெற வேண்டும், பணத்தை அதிகம் சம்பாதிக்க வேண்டும், பல மாடியை கட்ட வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இன்றைய பெற்றோர்கள் பெரும்பாலும் அவரவர் பிள்ளைகளை சிரமத்திற்கு உட்படுத்துகிறார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் குருவி தலையில் பனம் பழத்தை வைக்க முற்படுகிறார்கள் அதன் விளைவு தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது…
நம்பிக்கை நாயகன் எடிசனும்
அவர் எதிர் நோக்கிய சவால்களும்
இன்றைய மாணவர்கள் தோல்விகளை தோல்விகளாக பார்க்காமல் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களைப் போல போல தோல்விகளை தொல்லைகளை இடையூறுகளை முயற்சிகளாக பார்க்க வேண்டும் அவர் அந்த மனப்பான்மையில் செயல்பட்டதனால்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிகளுக்கு சொந்தக்காரர் ஆனார்,
தனது தளராத தன்னம்பிக்கையால், விடா முயற்சியால், கடின உழைப்பால் இருண்டு கிடந்த இந்த உலகத்தை மின்சார விளக்கை கண்டறிந்ததன் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்…
எடிசன் அவர்களும் ஆயிரக்கணக்கான தோல்விகளைச் சந்தித்துதான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆனார்… ஆனால் தோல்விகளை அவர் அணுகிய விதம் அற்புதமானது. மின்சார விளக்கை கண்டறியும் பொழுது கடினமான ஆராய்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்களைப் பயன்படுத்திப் பார்த்து எதுவும் சரியாக வராமல் இறுதியாக கார்பன்தான் பொருத்தமானது என்று கண்டுபிடித்தார். இந்த தொடர் தோல்விகள் பற்றி கேட்டபோது, “நான் மின்சார விளக்கை தயாரிக்கப் பயன்படாத 1000 பொருள்களைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்றார்.
1% உள்ளுணர்வு + 99% உழைப்பு = 100% வெற்றி இதுதான் எடிசனின் வெற்றி ரகசியம்.
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வார் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் திகழ்கிறார். அதைத்தான் நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்கள்….
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். என்றார்.
பேராசிரியரும் கவிஞருமான ஈரோடு தமிழன்பன் அய்யா அவர்கள் எழுதிய எத்தனையோ கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை.
பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!!
வாழ்க்கையில் அவ்வப்போது விழுவது கூட முக்கியம் இல்லை; விழும் போது எல்லாம் சோர்ந்து விடாமல் – முடங்கிப் போகாமல் – நம்பிக்கையோடு எழுவது தான் முக்கியம்..
எனவே இக்கட்டுரையை படிக்கும் தோழர்களே, நண்பர்களே எனது உடன்பிறவா சகோதர சகோதரிகளே, நாட்டின் நான்காவது தூணாக திகழும் மாணவச் செல்வங்களே..
லட்சியத்தை நோக்கிய உங்களது பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்,
வசந்தம் என்பது ஒரே நாளில் வந்து விடுவதில்லை என்பதை மனதில் வைத்து தொடர்ந்து போராடுங்கள் கடின உழைப்பை மேற்கொள்ளுங்கள், திட்டமிட்டு செயல்படுங்கள், தோல்வியை தோல்வியாக பார்க்காமல் தொடர்ந்து செல்லுங்கள்..
இதுவரை வாடிய பூக்களுக்காக
கண்ணீர் விடாமல்
இனிமேல் வாசம் வீசும்
பூக்களுக்காக தண்ணீர் விடுங்கள்.!!!
நிச்சயம் உங்கள்
வாழ்வில் வசந்தம் பிறக்கும்.!!!
எனவே தோழா.!!!
தோல்விகளை தோற்கடி
தற்கொலை எண்ணத்தையாக்கு
நீ தவிடுபொடி.
( வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு தொடரும்.. )
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
செல்: 7598534851