தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து தலைமைச் செயலர் இறையன்பு தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள், மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலர் அடையாறு மண்டலம், பெருங்குடி மண்டலம், கோடம்பாக்கம் மண்டலம், ராயபுரம் மண்டலம், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள், வால்டாக்ஸ் சாலையில் நெடுஞ்சாலை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அதிகாரிகளிடம், ‘‘வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுங்கள். இல்லாவிட்டால் தொழிலாளர்கள் சோர்வு அடைந்து விடுவார்கள். அதிக நேரம் வேலை வாங்காமல் சுழற்சி முறையில் வேலையாட்களை நியமிக்க வேண்டும். இங்கு மட்டுமின்றி எல்லா இடங்களிலும் இருக்கும் இயந்திரங்களை முறையாக பயன்படுத்துங்கள். எனக்கு தேவையானது, சென்னையில் மழை பெய்தால் எந்த இடங்களிலும் மழை நீர் நிற்கக்கூடாது என்று உத்தரவிட்டார். அதற்கு அதிகாரிகள், மழைநீர் சாலையில் தேங்காத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.
முன்னதாக திருவான்மியூர் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயை ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு, மழைநீர் வடிகால் பணிகள், தூர் வாரும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. நீங்கள் மனசு வைக்கவில்லை அதனால் இந்த பணிகள் விரைவாக முடிக்கவாய்ப்பில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.