மக்களுக்கு ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டத்தை அக்.6 ல் அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மதுரையில் தெரிவித்தார்.
மதுரை பெருங்குடியில் உள்ள ரேஷன் கடைகளை ஆய்வு செய்த போது ஒரு கடையில் தரமற்ற அரிசி இருந்தது. மக்களுக்கு அதை வழங்கக்கூடாது என உத்தரவிட்ட செயலர், கடைக்காரரிடம் அரிசியை மாற்ற அறிவுறுத்தினார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரிசி கடத்தல் தொடர்பாக 11ஆயிரத்து 8 வழக்கு பதிந்து 11ஆயிரத்து 113 பேரை கைது செய்துள்ளோம். 113 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.தற்போது 876 நேரடி கொள்முதல் மையங்கள் மூலம் 2.92 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தார்ப்பாலின் மூடப்பட்ட நெல் கிட்டங்கிகளில் மழையால் நீர்க்கசிவு பிரச்னை உள்ளது. அதை சரிசெய்யும் வகையில் மதுரை கப்பலூர் கிட்டங்கி உட்பட ரூ.238 கோடி மதிப்பில் 2.38 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்க கிட்டங்கியில் கூரை அமைத்து பக்கவாட்டில் தார்ப்பாலின் அமைக்கும் பணி நடக்கிறது.தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை பொருளாதார மையங்களாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். நபார்டு மூலம் ஒரு சதவீத வட்டியில் பெறப்படும் கடன்களை கூடுதலாக பெறவேண்டும்.
தற்போது 3 ஊராட்சிகளுக்கு ஒன்று என்ற அளவில் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. அது ஊராட்சிக்கு ஒன்று என உருவாக்கப்படும். மாவட்டத்திற்கு 75 ரேஷன் கடைகளை புதுப்பித்து நவீனப்படுத்தும் பணி நடக்கிறது.பயிர்க்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ததை அடுத்து கடன் சங்கங்களுக்கு அத்தொகையை படிப்படியாக விடுவித்து வருகிறோம்.
அரிசி வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகி விடும் என நுகர்வோரை பயமுறுத்தக்கூடாது. அரிசி வாங்காவிட்டாலும் கார்டு இருக்கும். இதன் மூலம் உண்மையாகவே அரிசி தேவைப்படுபவர்கள் மட்டும் வாங்கமுடியும்.கூட்டுறவு நகைக்கடனுக்கான வட்டி குறைக்கப்படும். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் செயல்படுகிறது.
வெளிமாநில, வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எந்த பகுதியில் உள்ளனரோ அங்கு ரேஷன் பொருட்களை வாங்கலாம். இவ்வாறு கூறினார். கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி கலந்து கொண்டனர்.