தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பேராவூரணிக்கு உட்பட்ட மாவடுகுறிச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவ விடுதி உள்ளது. அதேபோல் புனல்வாசலில் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் மாணவர் விடுதி உள்ளது. பட்டுக்கோட்டை மேலத்தெருவில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி உள்ளது.
இவை அனைத்தும் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. கழிப்பறைகள் அசுத்தமாக பராமரிப்பின்றி நோய்த்தொற்று ஏற்படுத்தும் வகையில் உள்ளன. போதிய துப்புரவு தொழிலாளிகள் பணியமர்த்தப்படாத நிலையில் பட்டப்படிப்பு படித்த வார்டன்களே சில விடுதிகளின் கழிவறைகளை சுத்தப்படுத்தும் அவலம். கல்வியை வளர்க்கிறோம். புதிய திட்டங்களை வகுக்கிறோம் என மார்தட்டிக்கொள்ளும் அரசு மாணவர்களின் உயிர் விஷயத்தில் அக்கறை காட்டாமல் அலட்சியமாக இருப்பது ஏன்? பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விடுதிகள் அமைத்து நடத்தி வரும் அரசாங்கம் மாணவர்களின் உயிர்பாதுகாப்பிலும், சுகாதாரத்திலும் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்து நலத்துறை என குறிப்பிட்டுக் கொண்டு பெருமை கொள்வதில் என்ன பயன்? குறிப்பாக பெண்கள் விடுதியில் கூடுதல் பிரச்சனை என்னவென்றால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மாணவியர் அறை வந்து கதவை தட்டி தொந்தரவு செய்வதே. இதற்கு சுற்றுச்சுவர் இல்லாதது, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இல்லாமை, போதிய காவலாளிகள் அமர்த்தாமை என பல்வேறு காரணங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இவை வருவாய்த்துறை அதிகாரிகள் கவனத்திற்கு வந்தும் அரசாங்கத்தின் தலைமைக்கு தெரிய வந்தும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? உயிர்பலி கொண்ட பின்னே ஓடி வரும் அரசு அதிகாரிகள் ஆபத்து வருமுன்னே அதை தடுக்க ஆவண செய்வதே சிறப்பு. துறை அமைச்சர்களும், தமிழக முதல்வரும் இந்த பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடங்களை புதுப்பித்தல் அல்லது புதிய விடுதிகளை கட்டித்தர வேண்டும். போதிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஏழை மாணவ, மாணவியரின் எதிர்பார்ப்பு..!