மதுரையைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடிக்கடி அளவீடு செய்ய வேண்டும் என பொன்மேனி கிராம நிர்வாக அலுவலர் தொந்தரவு செய்வதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
தற்போது டிஜிட்டல் உலகில் உள்ளோம். இதனால் நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி நில அளவீடு பணி மேற்கொள்ள வேண்டும். நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாளில் நில அளவீடு செய்ய வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.
இந்த தாமதத்துக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் ரூ.2500 பிடித்தம் செய்ய வேண்டும். மேலும் அப்பணியை மேற்கொள்ள வேண்டிய அளவையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நில அளவீடு தொடர்பாக தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். அதில் மனு செய்யும் நபர், அளவீடு செய்ய வேண்டிய இடம், அளவீடு செய்யப்பட்ட தேதி உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும். அந்த பதிவேட்டை உயர் அதிகாரி அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
நில அளவீட்டு பணிக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் அரசு நிலம், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை கண்டுபிடிக்கலாம். நில அளவீடு அல்லது மறு அளவீடு பணியை முழுமையாக புகைப்படம், வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
இதை சம்பந்தப்பட்டவர்கள் கட்டணம் செலுத்தி கேட்டால் வழங்கலாம். இந்த வழிகாட்டுதல்கள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை ஒரு மாதத்தில் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.
சில நில அளவையர்கள் வருவாய்த்துறை அரசுக்கு வருவாய் குவிக்கும் துறையாக கருதாமல் தங்களுக்கு வருவாய் சேர்க்கும் துறையாக கருதி செயல்படுகின்றனர்.
ஒரு காலத்தில் தமிழகம் நிர்வாகத்தில் சிறந்த மாநிலமாக இருந்தது. ஊழல் அதிகாரிகளால் அந்த பெயருக்கு தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளது. மனுதாரர் நிலத்தை நியாயமான நில அளவையர் ஒருவரை நியமித்து அளவீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.