சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த ஆதரவற்றோர் இல்லத்துக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, காவல்துறையினர் ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த கலா மற்றும் முத்துக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக காவல்துறையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவதை ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது. எந்த ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற வழக்கு காரணமாக காவல்துறை தங்கள் சட்டபூர்வமான கடமையை அமைதியான முறையில் மேற்கொள்ள முடியாமல் போகிறது.
சட்டம்- ஒழுங்கு பராமரிக்கும் போது ஏராளமான பிரச்னைகளை சந்திக்கும் காவல்துறையினர், தங்கள் கடமையை சுதந்திரமாகவும், நியாயமாக செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள 7 காவல்துறையினருக்கும் தலா ஐந்து ஆயிரம் ரூபாய் வீதம் வழக்கு செலவாக மனுதாரர் தர வேண்டும். இந்த தொகையை சென்னை காவல் ஆணையரிடம் 4 வாரங்களில் வழங்க வேண்டும். அதை காவல் ஆணையர் சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.