18 வயதுக்கு குறைந்தோரின் திருமணம் மற்றும் காதல் போன்ற விவகாரங்களில் அவசரப்பட்டு போக்சோ பிரிவில் கைது நடவடிக்கை எடுக்க கூடாது என அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் வழங்கிய அறிவுரைகள் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 வயதுக்கு குறைந்தோரின் திருமணம் மற்றும் காதல் போன்ற வழக்குகளில் அவசரப்பட்டு போக்சோ பிரிவில் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது.
அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி மனுதாரரை விசாரணை செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்து அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், குற்றவாளியை கைது செய்ய வேண்டுமென்றால் டிஎஸ்பி நிலை அதிகாரிகளின் அனுமதியுடன் தான் அதை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய வழக்குகளில் குற்றப்பத்திரிகையை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் தீவிர ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்கவேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.