திருமணமான இளம்பெண் ஒருவர் தன் கணவர் தன்னிடம் பிரச்சனை செய்து தன்னை வேண்டாம் என்று சொன்னதால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கும்பகோணம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது தனது பணம் மற்றும் உடைமைகளை தவற விட்டுவிட்டதாக கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க வந்துள்ளார். அப்போது அந்த இளம் பெண் கதறி அழுது கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு வலிப்பு வந்ததோடு அல்லாமல் அந்த இளம்பெண்ணின் நாசித் துவாரங்களில் ரத்தம் வரத்தொடங்கியது. அந்த இளம்பெண்ணை விசாரித்துக் கொண்டிருந்த காவலர் நிகிலா இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த இளம்பெண் கையில் சாவியை கொடுத்து, பின் அவர் முகத்தையும் கழுவி உதவி செய்தார்.
மேலும் அந்த இளம்பெண் உணவருந்தாமல் சோர்வான நிலையில் இருந்ததை அறிந்த காவலர் நிகிலா அந்த இளம்பெண்ணுக்கு உணவு வாங்கி வர ஏற்பாடு செய்ததோடு அல்லாமல் வலிப்பு மற்றும் பதற்றத்தால் நடுக்கிக் கொண்டிருந்த கைகளை வைத்து உணவருந்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த அந்த இளம் பெண்ணிற்கு காவலர் நிகிலாவே சாப்பாடு ஊட்டி விடவும் செய்தார். அந்தப் பெண் சற்று ஆசுவாசம் அடைந்ததை அடுத்து அந்த பெண்ணின் கணவரை வரவழைத்து கண்டித்ததோடு இல்லாமல் சேர்ந்து வாழ அறிவுறுத்தி அந்த இளம் பெண்ணையும் அவரது கணவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த செயலை கவனித்துக்கொண்டிருந்த அருகில் இருந்த பொதுமக்கள் தாயுள்ளம் தவறாத காவலர் நிகிலாவை வெகுவாக பாராட்டினர்.
கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் நிகிலா அவர்களின் இந்த செயலுக்காகவும் இவரின் பணி மென்மேலும் சிறக்கவும் நீதியின் நுண்ணறிவு குழு சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.