திருச்சியில், லஞ்சம் பெற்ற வழக்கில் நில அளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகரைச் சேர்ந்தவர் வெ. சக்கரவர்த்தி (82). இவர், தனது வீட்டு மனைகளுக்கு தனி பட்டா வழங்கக் கோரி திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக கடந்த 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அப்போதைய நிலஅளவைப் பிரிவு துணை ஆய்வாளராக பணியாற்றிய ஏ.கணேசமூர்த்தி (62) என்பவரை சந்தித்துள்ளார். அவர், தனி பட்டா வழங்குவதற்கு ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதை கொடுக்க விரும்பாத சக்கரவர்த்தி திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்த திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார், வட்டாட்சியர் அலுவலகத்தில் சக்கரவர்த்தியிடமிருந்து ரூ. 1,000த்தை லஞ்சமாக பெற்ற போது கணேசமூர்த்தியை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைகள் முடிந்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கணேசமூர்த்திக்கு, ஊழல் தடுப்பு சட்டம் 7ஆவது பிரிவின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.10ஆயிரம் அபராதமும், பிரிவு 13(2) உடன் இணைந்த 13(1)(டி) பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசு மற்றும் காவல்துறை சார்பில் ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், அரசு வழக்குரைஞராக சுரேஷ்குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர்.