கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் பெரியசாமி(49) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28.11.2022 -ஆம் தேதி பெரியசாமி வழக்கம்போல் வெளியில் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி முன்பக்க கதவை அடைத்துவிட்டு குளிப்பதற்காக பாத்ரூமிற்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது தனது வீட்டின் முன் நிறுத்தி இருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் செல்வதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணமும் திருடு போனதை அறிந்த அவர் உடனடியாக அவரது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த பெரியசாமி மனைவியிடம் நடந்ததை கேட்டு அறிந்து உடனடியாக வடவள்ளி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. லெனின் அப்பாதுரை அவர்கள் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், தீவிர புலன் விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்த்(23) மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் முத்துசுருளி(35) என்பதும் தெரிய வந்த நிலையில் இரண்டு நபர்களையும் கைது செய்து, வீடு புகுந்து கொள்ளையடித்த
17 1/4 சவரன் தங்க நகைகள், ரூ.1,85,000/-ரொக்க பணம் மற்றும் நான்கு சக்கர வாகனம்- ஒன்றையும் பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
வீட்டில் தனியாக இருப்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையின் எண் போன்ற எண்களை தவறாது வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், இ.கா.ப., அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.