“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி”
என்கிறார் ஔவையார்.
“சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்!
என்கிறார் பாரதியார்.
இப்ப பாடல் வரிகள் எல்லாம் அனைவரும் பள்ளி நாட்களில் படித்திருக்கிறோம். ஆனால் சாதிகள் தொடர்பான எந்த குறிப்பும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளில் இடம்பெறவில்லை. ஏனென்றால் அப்போது சாதிகள் தொடர்பான வேறுபாடுகளோ, ஏற்றத்தாழ்வுகளோ இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் திருவள்ளுவர் கட்டாயம் அது தொடர்பான ஒரு அதிகாரத்தை வைத்திருப்பார். சாதிப் பாகுபாடு என்பது பழங்காலத்தில் இல்லை என்பது உறுதியாகிறது. ஆனால் பிற்காலத்தில் பிறப்பின் அடிப்படையில் சாதிப் பாகுபாடுகள் வளர்ந்து விட்டன. இது தொடர்பான விவாதங்களும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று நிர்ணயிக்கப்படுவது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. ஒருவன் எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் அவன் தீயவனாக இருந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும் , கொள்ளைக்காரனாக இருந்தாலும், திருடனாக இருந்தாலும், பாலியல் கொடூரக்காரனாக இருந்தாலும், தற்போது சொல்லக்கூடிய உயர் ஆதிக்க சாதியில் பிறந்திருந்தாலும் அவன் உயர்சாதியாகவே போற்றப்படுவார் .ஆனால் எவ்வளவு நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுக்க நெறிகள், நேர்மை, தியாகம் கொண்ட ஒருவன் பட்டியலிடத்தில் பிறந்து விட்டால் அவன் தாழ்ந்த குலமாகவே பாதிக்கப்படுவது போன்ற இழிநிலை இந்நாட்டில் தவிர வேறு எங்கும் இல்லை.
இந்த இழி நிலையை போக்குவதற்காக தான் தமிழ்நாட்டில் இருந்து காத்தவராயன் என்ற அயோத்திதாச பண்டிதர் தோன்றினார். இரட்டைமலை சீனிவாசன் போன்ற பெரியோர்கள் இந்த இழிநிலையை ஒழிக்க போராடினார்கள். அதன் வழியாகத்தான் அம்பேத்கர் என்ற பெரிய பேரறிஞர் தோன்றி சாதி ஒழிப்பு, சனாதன ஒழிப்பு, சமூக நீதி, பொருளாதார சமநிலை, பெண் கல்வி போன்ற கருத்துக்களை முன்னிறுத்தி அனைத்து மக்களின் பிரதிநிதியாக நின்று போராடினார். தமிழ்நாட்டில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் இதே கருத்துக்களை வலியுறுத்தி போராடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆனால், இன்றைய நிலை என்ன? தென்காசி மாவட்ட மாவட்டம் பாஞ்சாலம் கிராமத்தில் மிட்டாய் வாங்க சென்ற சிறுவர்களுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற போர்வையில் மிட்டாய் கொடுக்க மறுக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் கிளாமங்களம் கிராமத்தில் தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறையில் நடைமுறை இருப்பதாகவும், முடி திருத்தகங்களில் பட்டியல் இனத்தவருக்கு முடி திருத்திக்கொள்ள அனுமதி இல்லை என்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு அங்கு பதற்றம் உருவாகி வருவதாக செய்திகள் வெளியிடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் சாதி கட்டுப்பாடு என்ற போர்வையில் ஆதிக்கம் நடைபெறுகிறது. இதன் உச்சகட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சமூக விரோதிகளால் மனித கழிவுகள் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பட்டியல் இன மக்கள் பயன்படுத்துவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு உள்ள தேனீர் கடைகளில் இரட்டை குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாகவும், கோவில்களில் பட்டியல் இன மக்களை அனுமதிப்பதில்லை என்றும் செய்திகள் வெளிவர தொடங்கி உள்ளது. இத்தனைக்கும் அது ஒரு கிராம கோவில். சிறு தெய்வ வழிபாட்டிற்கு உரியது. இது எதனை காட்டுகிறது?
இது போன்ற சாதிக் கொடுமைகள் குறிப்பாக தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமூகநீதி பேசும் அரசியல் கட்சிகள் அறிக்கையாக வெளியிட்டு கடந்து சென்று விடுகின்றனர். சிறு கட்சிகள் அதன் தலைவர்கள் இதனை கையில் எடுத்து மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இதனை சரி செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள்.
ஐந்து அறிவுக்கு குறைவாக உள்ள விலங்கினங்களில் கூட சாதி எனும் பாகுபாடு, ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. அவைகள் ஒரே இடத்தில் வசிக்கின்றன. ஒரே இடத்தில் உணவை உணவை பகிர்ந்து உட்கொள்கின்றன. ஆறறிவு உடையதாக சொல்லப்படும் மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த சாகு சாதி பாகுபாடு வந்தது. சாதி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது யார்? மூன்று சதவீதத்திற்கு கீழ் உள்ள பிராமணர்களால் மட்டும் இதை எப்படி உட்பகுத்த முடியும். இவர்களுக்கு பக்க பலமாக இருந்து யார்?
பட்டியல் இன மக்களுக்காகவும் அவர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பல அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியல் எனும் நீரோட்டத்தில் முழுமையாக கலந்து விட்ட காரணத்தால் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வாக்கு வங்கியை அடிப்படையாக வைத்து அந்த அரசியல் கட்சிகள் இயங்குகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இந்த கட்சிகள் சமூக நீதியையும் பொருளாதார நீதியையும் பட்டியல் இன மக்களுக்கு பரவலாக்க தவறிவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாக மாறிவிடும். இந்த கட்சிகள் இந்த கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு பட்டியல் இன மக்களின் நலன்களை முன்னிறுத்தி இவ்வாறு நடைபெறும் கொடுமைகளை முழுமையாக துடைத்தெறிய போராட வேண்டும் என்பது எனது கருத்து மட்டுமல்ல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. ஆகவே இந்த கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை மீண்டும் ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
ஒரு காலத்தில் பிராமண எதிர்ப்பு என்பது அதிகமாக பேசப்பட்டது. பிராமணர்களால் பட்டியலிட மக்களுக்கும், இதர பிற்பட்ட மக்களுக்கும் பலவிதமான இன்னல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் தந்தை பெரியார், பீமாராவ் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பிராமண எதிர்ப்பு என்பதை முன்னிறுத்தி போராடினார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பட்டியலின மக்களுக்கு பிராமணர்களால் நேரடியாக எவ்வித பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆனால், ஒரு சில உயர் ஆதிக்க சாதிகள் உள்ள நபர்கள் மூலம் பட்டியலிட மக்களுக்கு, சமூக, பொருளாதார, உடல் மற்றும் மன அடிப்படையிலும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. அதற்காக ஒரு சில சிறிய சமூக அமைப்புகள் போராட்டமும் நடத்தி வருகின்றன.. அரசு அதிகாரிகளும் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு இன்னல்களை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு காரணம் அம்பேத்கர். அவர் வடிவமைத்த அரசியல் சட்டம் . இது பட்டியலின மக்களுக்கு ஏற்படும் துயரங்களை துடைக்க அரசு அதிகாரிகளுக்கு ஆயுதமாக பயன்படுகிறது. இதற்கும் தற்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது.
ஒரு கிராமத்தில் வாழும் மக்களின் குடிநீரில் மலத்தினை கலக்கும் தீய எண்ணம் எப்படி ஏற்படுகிறது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். இதனை எல்லாம் பார்க்கும் பொழுது பெரியாரின் கருத்துக்கள் நாளுக்கு நாள் நீர்த்துப் போய்க் கொண்டே வருகின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது . பெரியாரின் கருத்துக்களை முன்னிறுத்தி அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் அவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் இளம் தலைமுறையினர் மனதில் நிலை நிறுத்த தவறிவிட்டனர் என்று கருத தோன்றுகிறது . ஏனென்றால், இது போன்ற பிரச்சனைகளை உருவாக்குவது இன்றைய தலைமுறையினர். இவர்களின் மனதிற்குள் பெரியாரின் கருத்துக்களும் கொள்கைகளும் நேரடியாக சென்று சேரவில்லை சேர்ப்பதற்கான எந்த முயற்சியையும் பெரியாரை முன்னிறுத்து அரசியல் செய்யும் கட்சிகள் செய்ய தவறிவிட்டதோ என்று கருதத் தோன்றுகிறது. இது போன்ற பிரச்சனைகள் கடந்த 10 வருடங்களாக மிக அதிகமாக ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு விவாதித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு காரணம் வாக்கு வங்கி தேர்தல் அரசியலா? அல்லது சாதி அடிப்படையிலான அரசியலா? என்பதை சமூக ஆர்வலர்களின் விவாதத்திற்கு விட்டு விடுகிறேன்.
நாளுக்கு நாள் பழங்குடி பட்டியலின மக்களின் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதற்கு காரணமாக உள்ள நபர்கள் அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ளார்கள். சமூக நீதிப் பேசும் அரசியல் கட்சிகள் தனது கட்சியில் உள்ள இந்த தீய எண்ணம் உள்ள உறுப்பினர்களுக்கு முதலில் அறிவுரைகள் வழங்க வேண்டும். பெரியார் அவர்கள் மாற்றத்தினை தன்னிலிருந்து தொடங்கினார். தான் அப்படியே இருந்துவிட்டு மேடைகளில் மட்டும் சமூகநீதி பேசுவது எவ்வகைகளில் நியாயம். சமூகநீதி பேசும் அரசியல் கட்சிகள் இருந்து கொண்டே சாதிய அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் பேசக்கூடிய பல நபர்களை கட்சியில் காணலாம். ஆகவே சாதி ஒழிய வேண்டும், சமூக நீதி பிறக்க வேண்டும் என்று மேடைகளில் பேசுவதை விட்டுவிட்டு தொண்டர்களிடையே இதனை மனதில் நிறுத்தி செயல்பட அரசியல் கட்சிகள் அனைவரும் முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில் மறுபடியும் பெரியார் போன்ற ஒரு பெரிய சமூக நீதி ஆளுமை தற்காலத்தில் தோன்ற வேண்டும் இது சாத்தியமா.?
தற்போதைய சூழலில் பட்டியலின மக்களின் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுப்பதற்கும் போராடுவதற்கும் பேசுவதற்கும் ஒரு சில தலைவர்களை தவிர வேறு எவரும் தமிழகத்தில் இல்லை. அவர்கள் அனைவரும் தேர்தல் அரசியலை விட்டு விட்டு சமூகநீதி அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் இது போன்ற கொடுமைகள் நடைபெறா வண்ணம் தடுக்க முடியும். இதுவும் சாத்தியமா.?
“நான் யாருக்கும் அடிமை இல்லை. எனக்கும் யார் அடிமை இல்லை” என்று முழங்கியவர் அம்பேத்கர். இந்த எண்ணத்தை அனைத்து மக்களின் மனதில் இருக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
பட்டியலின மக்களை கோவிலுக்கு அழைத்துச் செல்லும் பொழுது அங்குள்ள உயர் சாதி பெண் ஒருவர் சாமியாடி அவர்களை அழைத்து உள்ளே வர வேண்டாம் என்று சொன்னதாக செய்தித்தாள்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. கடவுள் மட்டும் பேசுபவராக இருந்திருந்தால் அந்தப் பெண்ணையே தண்டித்து இருப்பார். இதைத்தான் பெரியார் விரிவாக சொன்னார். “எங்கே சமத்துவம் மறுக்கப்படுகிறதோ அங்கே நாத்திகம் பிறக்கும். நீயும் நானும் சமம். உனக்குள்ள உரிமை எனக்கும் வேண்டும். எனக்குள்ள உரிமை எல்லோருக்கும் வேண்டும். அதற்கு குறுக்கே சாத்திரம் வந்தால் அதை எதிர்ப்பேன். சாத்திரத்தை உருவாக்கியது மதம் என்றால் அதனை எதிர்ப்பேன். மதத்தை உருவாக்கியது கடவுள் என்றால் அதனையும் எதிர்ப்பேன்” என்றார். இப்பொழுது தெரிகிறதா ஏன் பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்தார் என்று. பெரியாருக்கு கடவுள் ஒன்றும் எதிரி இல்லை. கடவுளை அனைவரும் சமமாக வணங்க வேண்டும் என்றால் அதையும் அவர் ஆதரித்து தான் இருப்பார். கடவுளின் பெயரால் சாதிக் கொடுமைகள் ஏற்படுவதை தவிர்த்து இருந்தால் ஏன் அவர் கடவுளை எதிர்க்க போகிறார்?. கடவுளின் பெயரால் ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் பெரியார் இருந்தார்.
அனைத்து சாதி மக்களும் இது போன்ற கொடுமைகள் செய்கிறார்கள் என்பதை ஒட்டுமொத்தமாக சொல்ல முடியாது. சில ஊர்களில் சமமாக பாவித்து மக்கள் வாழ்கிறார்கள். ஒரு சில ஊர்களில் மனதிற்குள் சாதிப்பாகுபாடு இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் வாழ்கிறார்கள் .ஒரு சில இடங்களில் தான் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. “நாட்டிற்கு சாதி வெறியன் எவ்வளவு ஆபத்தானவனோ, அதுபோல் சுயசாதி பெருமை பேசுபவனும் ஆபத்தானவன் தான்”. இது அனைத்து சாதிக்கும் பொருந்தும். நீ கல்வியில் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு, அடைந்து விட்டால் உனது சமூகத்தை மேம்படுத்தலாம். இம்மூன்றிலும் நீ தன்னிறைவு பெறாதவரை உனது சமூகத்தை சமூக மேம்பாடு அடையச் செய்ய முடியாது. ஆகவே சமூக மறுமலர்ச்சி என்பது கல்வியால் மட்டுமே அடைய முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
– முனைவர்.கா.தர்மேந்திரா
k.tharmendira@gmail.com