கோவை சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட காவல் நிலையங்களில் நடப்பாண்டில் நடைபெற்ற குற்ற வழக்குகள் குறித்த ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது.
மேற்கு மண்டல ஐஜி.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவை சரக டிஐஜி முத்துசாமி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட எஸ்.பி க்கள், மற்றும் டி.எஸ்.பி-க்கள் பங்கேற்றனர்.
ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை சரகத்தில் கடந்த 2021 ஆண்டை விட, இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது.
கோவை சரகத்தில் கடந்த ஆண்டு மொத்தம் – 142 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் 91 வழக்குகளாக குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட 50 விழுக்காடு கொலை வழக்கு குறைந்துள்ளது.
கோவை சரகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் சராசரியாக 30 விழுக்காடு கொலை வழக்குகள் குறைந்துள்ளது. இதுவே சட்டம் ஒழுங்குக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் போக்ஸோ வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 17 வழக்குகளில் தீர்ப்பு பெறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 87 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. கோவை சரகத்தில் மொத்தம் 308 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
கோவை சரகத்தில் மொத்தம் 1,211 கிராமங்கள் உள்ளது. அதில் 721 கிராமம் கஞ்சா இல்லாத கிராமங்களாக உள்ளது. மொத்த கிராமங்களில் 60 விழுக்காடு கிராமங்களில் கஞ்சா இல்லாத கிராமம்.
கடந்த ஆண்டு ஆதாய கொலை – 9 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 4 ஆக குறைந்துள்ளது. கோவை சரகத்தில் குற்ற வழக்குகள் குறைந்துள்ளது.
கஞ்சா இல்லாத மண்டலமாக அறிவிக்க வேண்டும், கொலை குற்ற வழக்குகளை குறைக்க வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது இலக்காக உள்ளது.
இந்த ஆண்டு கோவை சரகத்தில் 155 பேர் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை. புரோஜெக்ட் பள்ளிக்கூடத்திற்கு பிறகு 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 39 குழந்தைகள் புகார் அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.