குடும்ப உறுப்பினர்கள் தங்களின் ஆதாரில் குடும்ப தலைவரின் ஒப்புதலுடன் முகவரியை மாற்றிக் கொள்ளும் புதிய ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற இருப்பிட சான்று ஆவணம் வழங்க வேண்டும். ஆனால், அனைத்து குடும்ப உறுப்பினர்கள் (குழந்தைகள், கணவன் / மனைவி, பெற்றோர்) பெயரிலும் இருப்பிட சான்று ஆவணங்கள் இருப்பதில்லை. இதனால், அவர்கள் ஆதாரில் முகவரியை மாற்ற சிரமப்படுகின்றனர். அவர்களுக்காக, குடும்ப தலைவரின் ஒப்புதலுடன் முகவரியை மாற்றும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முகவரியை மாற்ற விரும்பும் குடும்ப உறுப்பினர்கள், அவர்களது குடும்ப தலைவருடனான உறவை நிபிக்க இருவருக்கும் இடையேயான உறவை குறிப்பிட்டு, அவர்களது பெயர்கள், ரேஷன் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், திருமண சான்றிதழ், பாஸ்போர்டு போன்ற ஆவணங்களை ஆதாரமாக சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். உறவுமுறைக்கான ஆவணங்கள் இல்லாதபட்சத்தில், யுஐடிஏஐ வழங்கியுள்ள குறிப்பிட்ட படிவத்தில் குடும்பத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சுய சான்றிதழைப் பயன்படுத்தலாம். தற்போதுள்ள இருப்பிடச் சான்று ஆவண வசதியுடன், இந்த முறை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் குடும்பத் தலைவராகக் கருதப்படுவதோடு, தமது முகவரியை உறவினர்களுடன் இதற்காக பகிர்ந்து கொள்ளலாம்.
https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் இந்த வசதியை பெறலாம். இதற்கு கட்டணம் ரூ 50. கட்டணம் செலுத்திய பிறகு குடும்பத் தலைவருக்கு இது குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும். அறிக்கை கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் குறிப்பிட்ட இணையதளத்தில் குடும்பத் தலைவர் தமது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் இந்த கோரிக்கையை குடும்பத் தலைவர் நிராகரித்தாலோ, அல்லது முகவரியை பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்காவிட்டாலோ, சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிறுத்தப்படும். இது சம்பந்தமான தகவல், விண்ணப்பித்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.