பொறுப்பு துறப்பு
இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டது அல்ல ஆகவே நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இக்கதையின் மூலம் ஏற்படும் மன உளைச்சலுக்கோ, குழப்பங்களுகோ நிர்வாகமும் ஆசிரியரும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜானை போலவே முத்துவும் வீட்டிற்கு வந்தவுடன் உணவருந்திவிட்டு நன்றாக ஓய்வெடுத்த பின் எழுந்தார். முத்துவின் மனைவியும் பிள்ளைகளும் வந்து சேர்வதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் முத்துவிற்கு ரகசிய கூட்டத்தில் கொடுக்கப்பட்ட பையையும், கைபேசியையும் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஏதுவாக அமைந்தது அந்த தனிமை. முதலில் அங்கு கொடுக்கப்பட்ட பையை திறந்து பார்த்தார். அதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆறு புத்தகங்கள் இருந்தன. ஒவ்வொரு புத்தகமும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் வகைப்படுத்த முடியாமலிருந்தது. மேலும் மாவட்ட வாரியாக தெளிவான புவியியல் வரைபடமும் அத்துடன் கையேடு மற்றும் பேனா ஒன்றும் இருந்தது. அனைத்தையும் பார்த்துவிட்டு மீண்டும் அந்த பையினுள் திருப்பி வைத்தார்.
“இவை அனைத்தும் என்ன? எதற்காக நம்மிடம் கொடுத்தார்கள்” என்று சிந்தித்துக் கொண்டே அவரது கவனத்தை கைபேசியின் பக்கம் திருப்பினார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த கைப்பேசியில் எந்தவிதமான நிறுவனத்தின் பெயரோ அல்லது முத்திரையோ இல்லாமல் தனித்துவமாக இருந்தது. அதை எவ்வாறு இயக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் ஒருவழியாக ஒரு மணி நேரத்திற்கு மேல் பலவிதமான முயற்சிகளின் மூலம் அந்த தனித்துவமான கைபேசியை எவ்வாறு இயக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார் முத்து.
பாதிரியார் அழைத்தார் என்று அழைத்துச்செல்லப்பட்ட ஜானின் வருகையை எதிர்பார்த்து காத்து அமர்ந்திருந்த ஜானின் மனைவி கிறிஸ்டினாவிடம் பெண் ஒருவர் வந்து அமர்ந்தார். அது கிறிஸ்டினாவிற்கு மிகவும் பழக்கப்பட்ட முகம் தான் Z1 காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி அவர்.
“மேடம் தனியாவா வந்தீங்க” என்று கேட்ட அந்த பெண்ணிடம் “இல்ல மேடம், அவரும் தான் வந்திருக்காரு பாதர் கிட்ட பின்னாடி பேசிக்கிட்டு இருக்காங்க” என்றார் கிறிஸ்டினா.
“அப்படியா சரி சரி, பிரார்த்தனை முடிஞ்சப்புறம் நானும் என் கணவரும் உங்க வீட்டுக்கு வரலாம் என்று இருந்தோம். நல்லவேளை இங்கே பார்த்துட்டேன். உங்கள வீட்ல வேற வந்து தொந்தரவு பண்ண வேண்டியதில்லை” என்று கூறி சிரித்து அந்த பெண்ணிடம் கிறிஸ்டினா “தொந்தரவு எல்லாம் ஒன்றுமில்லை ஏன் இப்படி பேசுறீங்க நீங்கள் இருவரும் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம்” என்றார்.
“இனிமே நீங்க வீட்ல எப்போ இருப்பீங்க என்று தெரியாது. ஏன் மேடம் எங்க யார்கிட்டயும் சொல்லாம இப்படி ஒரு முடிவு” என்று கேட்ட அந்த பெண்ணை குழப்பத்துடன் பார்த்த கிறிஸ்டினா அந்த பெண்ணிடம் “என்ன சொல்றீங்க மேடம் எனக்கு ஒன்னும் புரியல” என்றார்.
“இல்ல மேடம் சார் வி.ஆர்.எஸ் வாங்குவதை நாங்க யாரும் எதிர்பார்க்கலை, எங்க யாருக்குமே இந்த விஷயம் தெரியாது, ஒருத்தர் கிட்ட கூட சொல்லலையே காலைல கூட ஸ்டேஷனுக்கு வந்தாரு. பங்க்ஷன் எல்லாம் எதுவும் வேண்டாம் என்று நினைத்து இருந்தால் கூட எங்களோடு வேலை பார்த்த மரியாதைக்காவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். சார் எப்பவுமே என்ன ஒரு தங்கச்சி போல தான் நடத்துவார் என்கிட்ட தனிப்பட்ட முறையில் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் கொஞ்சம் மனம் வருத்தமா இருக்கு மேடம்” என்றார் அந்த பெண்.
கிறிஸ்டினாவுக்கு குப்பென்று வேர்த்தது. கைகள் படபடக்க தொடங்கின. இருப்பினும் நிலைமையை புரிந்து கொண்ட கிறிஸ்டினா அந்த பெண்ணிடம் “இல்ல மேடம் இது ரொம்ப கஷ்டமான முடிவு, அவர் உங்கள் அனைவர் மீதும் அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர். இத்தனை ஆண்டுகாலம் உங்களோடு வேலை செய்துவிட்டு பிரியும் தருணம் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனாலதான் யார்கிட்டயும் சொல்லலை” என்றார்.
“பரவாயில்லை மேடம் என்னால புரிஞ்சுக்க முடியுது, இருந்தாலும் ஒரு வார்த்தை போயிட்டு வரேன்னு சொல்லி இருக்கலாம். நீங்கள் சொல்வது சரிதான். நான் அவர் கோனத்தில் இருந்து யோசிக்கவில்லை. மன்னிச்சிடுங்க மேடம்” என்றார் அந்த பெண்.
“என்ன மேடம் மன்னிப்பெல்லாம் கேக்குறீங்க. அவர் மேல இருக்கிற பாசத்திலும், உரிமையிலும்தான் இங்கு வந்து பேசிகிட்டு இருக்கீங்க, யாரோ எப்படியோ போனா என்ன என்று நினைத்து இருந்தால் இப்படி உரிமையா வந்து கேட்க மாட்டீங்க இல்லையா?, அதனால நியாயமா பார்த்தா நாங்க தான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார் கிறிஸ்டினா.
“பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க, அதான் சொன்னேனே மேடம் நான் அண்ணன் பக்கமிருந்து யோசிக்கவே இல்லை. சரி விடுங்க,! ஆமா எப்போதும் வாரக் கடைசி நாள் மட்டும் தானே சர்ச்சுக்கு வருவீங்க? இன்னைக்கு என்ன ரிட்டயர்மென்ட் ஸ்பெஷலா?” என்றார் அந்த பெண்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மேடம்” என்று அந்தப் பெண்ணிடம் கூறிக்கொண்டிருக்கையில் அழுகையும் ஆத்திரமும் முற்றிய நிலையில் அடக்கிக்கொள்ள மிகவும் கடினப்பட்டார் கிறிஸ்டினா.
அழுது வடிந்த முகமாக கண்களைத் துடைத்துக் கொண்டே ஏதோ பேசிக்கொண்டு கிறிஸ்டினா இருக்கையை நோக்கி ஜானும் பாதிரியாரும் வந்துகொண்டிருந்தனர்.
இதை கவனித்த அந்த பெண் “இதோ வந்துட்டாங்க, கொஞ்சம் இருங்க மேடம் நான் போய் என் கணவரை கூட்டிட்டு வரேன் வெளியே பேசிட்டு இருக்கார்” என்று கூறிவிட்டு விரைந்து சென்றார் அந்த பெண்.
பாதிரியார் அருகில் வந்ததும் எழுந்த கிறிஸ்டினா “குட் ஈவினிங் பாதர்” என்றார்.
“ப்ரைஸ் தி லார்ட், வெரி குட் ஈவினிங் மிஸஸ் ஜான், உங்கள பார்த்தது சந்தோஷம். உங்கள் இருவரையும் அப்புறம் சந்திக்கிறேன் என்ற பாதிரியார் கிறிஸ்டினாவிற்கு வணக்கம் கூறிவிட்டு ஜானிடம் கைகுலுக்கி விட்டு மீண்டும் தன் அறை நோக்கி நடந்தார்.
(தொடரும்…)