தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் -உடையநாடு மெயின் சாலையில் கிளை சாலையான மரக்காவலசை ஊராட்சி வங்காளதோப்புசாலை சுமார் 950 மீட்டர் தூரம் கொண்ட சாலையாகும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை துறையூர், ரெகுநாயகிபுரம், நாயகத்திவயல், மரக்காவலசைமேற்கு ஆகிய கிராமங்களில் இருந்து அங்காடிக்கு பொருட்கள் வாங்கவும், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்திற்கு வரவும், ஊராட்சி மன்ற அலுவலகம் வரவும், பள்ளி மாணவ மாணவிகள் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வந்து செல்லவும், விவசாயிகள் விவசாய பொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தற்போது குண்டும் குழியுமாகவும், கப்பிகள் பெயர்ந்தும், தார் சாலைக்கு உண்டான அறிகுறி எதுவும் தெரியாமல் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. இதில் இருசக்கர வாகனங்கள் செல்லும்போது பஞ்சர் ஆகி விடுகிறது. அந்த சாலையில் நடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவர்களின் காலணிகளை கிழித்துக் கொண்டு மாணவர்களின் கால்களை பதம் பார்த்து சிகிச்சை பெற்று வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. நாடியத்திலிருந்து உடையநாடு செல்லும் மெயின் சாலையிலிருந்து கிளை சாலையாக பிரிந்து செல்லும் வங்காள தோப்பு சாலை சேதுபாவாசத்திரத்திலிருந்து மரக்காவலசை வழியாக பேராவூரணி செல்லும் மெயின் சாலையின் இணையும் மிகவும் முக்கியமான சாலையாகவும் உள்ளது.
இதுபற்றி கிராம பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த சாலையை நேரில் பார்வையிட்டு போர்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து தரவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- Dr. வேத குஞ்சருளன்