தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆட்களை ஏற்றி செல்லும் டிராக்டர்களை வாகன தணிக்கையின் போது காவல்துறையினர் பறிமுதல் செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஒப்படைத்து விடுவதாகவும், அதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு விவசாய அமைப்புகளால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், வாகன தணிக்கையின் போது டிராக்டர்களில் விவசாய பணிகளுக்காக செல்லும் விவசாய தொழிலாளர்களை காத்திருக்க வைக்கப்படுவதாகவும், இதனால் நாற்று நடுதல், அறுவடை போன்ற முக்கிய விவசாய பணிகளை உரிய நேரத்தில் கவனிக்க இயலாமல் போவதோடு, தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்களுக்கு இது தொடர்பாக தேவையான அறிவுரைகளை வழங்கி, விவசாய பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.