தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக சமூக நலத் துறை சார்பில் ‘முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பெண் குழந்தையின் பெயரில் வைப்பு தொகையாக ரூ. 50 ஆயிரம் தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. அதுவே ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக உதவித்தொகை பெற, ஓய்வூதியம் மற்றும் மின் இணைப்பு போன்ற பல திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்பொழுது முதலமைச்சரின் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டத்தை பெற இனி ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசின் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெயரில் இருக்கும் வைப்பு நிதிக்கான ஆவணம் அவர்களின் பெற்றோர்களிடம் வழங்கப்படும்.
தமிழக அரசு உத்தரவின்படி, பெண் குழந்தைகள் பாதுக்காப்பு திட்டத்தை பெறுவதற்கு ஆதார் எண் இல்லாதாவர்கள் தங்களின் பெற்றோர்கள் மூலம் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து அதன் மூலம் இத்திட்டத்தில் இணைத்து கொள்ளலாம். மேலும், புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் பாஸ்புக், ஓட்டுநர் உரிமம் போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு சான்றிதழ் மூலம் இணைத்து இத்திட்டத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம்.