02.02.2023 அன்று சென்னை கிண்டி பீனிக்ஸ் வணிக வளாகம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போது அதில் வந்த இரு இளைஞர்கள் காவலர்களை தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றனர். தப்ப முயன்றவர்களை காவலர் மோகன் ராஜ் விரட்டி சென்று மடக்கி பிடித்தார். அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் பட்டாக்கத்தி இருந்தது தெரிய வந்தது. பிடிபட்ட இருவரும் கிண்டி சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசாரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சரித்திர பதிவேடு போக்கிரியான கார்த்திக் என்கிற அவதார் கார்த்திக் என்பதும் சதீஷ் என்கின்ற தீஞ்ச சதீஷ் என்பதும் தெரியவந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
துணிச்சலுடன் செயல்பட்ட காவலர் மோகன் ராஜை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.