பெற்ற தாய் கூட இங்கு நிழலே..
அவளின் பாசம் மட்டுமே என்றும் நிரந்தரம் ..
தூக்கிச் சுமந்த தந்தையும் இங்கு நிழலே..
அவரின் அர்ப்பணிப்பு மட்டுமே என்றும் நிரந்தரம்..
பாடம் தந்த குருவும் இங்கு நிழலே..
அவரிடம் கற்ற அறிவு மட்டுமே என்றும் நிரந்தரம்..
உடன் பிறந்த உறவுகளும் இங்கு நிழலே..
அவர்களிடம் கிடைக்கும் அரவணைப்பு உணர்வு மட்டுமே என்றும் நிரந்தரம்..
கதைத்து மகிழும் நண்பர்களும் இங்கு நிழலே..
அவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே என்றும் நிரந்தரம்..
வாழ்க்கையை பங்கிடும் கணவணோ மனைவியோ கூட இங்கு நிழலே..
அவர்களின் நேசம் புரிந்துணர்வு மட்டுமே என்றும் நிரந்தரம்..
பெற்று வளர்த்த மகனோ மகளோ கூட இங்கு நிழலே..
அவர்களுக்கான நம் பொறுப்புணர்வு மட்டுமே என்றும் நிரந்தரம்..
ஓடி ஓடி சேர்த்த சொத்துபத்துக்கள் எல்லாம் இங்கு நிழலே..
அவற்றிற்காக பாடுபட்ட நம் உழைப்பு மட்டுமே என்றும் நிரந்தரம்..
தேடித்தேடி சுவைத்து வளர்த்த உடம்பும் இங்கு நிழலே..
அதன் புலங்கலால் பெற்ற இன்ப துன்ப அனுபவங்கள் மட்டுமே என்றும் நிரந்தரம்..
இப்படி பொருளாக நாம் கண்ணால் காணும் காட்சிகள் யாவும் இங்கு நிழலே..
கடவுளைப் போன்று கண்ணுக்கு புலப்படாது நம் மனதாலும் உள் உணரப்படும் உயர்ந்த உணர்வுகளே, பெற்ற அனுபவங்களே, கற்ற பாடங்களே இந்த வாழ்வில் என்றும் நிரந்தரம்..
எனவே இனி நிரந்தரம் எதுவோ அதை எண்ணி உள்நோக்கி நமக்காக பயணிப்போமாக நன்றாக வாழும் போதே..
– மீனாட்சி வெங்கடேஷ்