சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சாலை பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்திற்காக உறுதியான முயற்சிகளை போக்குவரத்து அமலாக்கம், கல்வி மற்றும் பொறியியல் மூலம் செயல்படுத்தி வருகிறது. போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றில் தொழில்நுட்ப முறையை பயன்படுத்துவதில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை முன்னிலையில் உள்ளது.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினை நவீனபடுத்தும் நோக்கில் சென்னையிலுள்ள சிக்னல்களில் ரூ.4,21,99,230 செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 வேகக்காட்சி பலகைகள், 45 பல்நோக்குச் செய்தி பலகைகள், 139 LED பொருத்தப்பட்ட போக்குவரத்து காவல் நிழற்குடைகள் மற்றும் 170 ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள் ஆகிய 4 நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய சாதனங்களின் இயக்கத்தை, காவல் ஆணையாளர் அவர்கள் 15.03.2023 அன்று அண்ணா சாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துவக்கி வைத்தார்.
- வேகக் காட்சி பலகைகள் (Speed display board) வாகனங்களின் அதிக வேகம் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே, அதிக வேக வழக்குகளை பதிவு செய்வதில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் (GCTP) கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு, 2022 ஆம் ஆண்டில் 23,374 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இருப்பினும், பல்வேறு சாலைகளில் வேக வரம்புகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவும், அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேக வரம்புடன் தங்கள் வாகனத்தை கடக்க அனுமதிக்கவும், கீழ்கண்ட ஆறு இடங்களில் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து மொத்தம் ரூ.25,31,100/- செலவில் 6 வேகக் காட்சிப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
அண்ணாசாலை – D2 காவல் நிலையம் எதிரில் காமராஜர் சாலை – உயர்கல்விக்கான தமிழ்நாடு மாநில கவுன்சில். ஈ.வி.ஆர்.சாலை – T3 காவல் நிலையம் எதிரில். ECR- VGP அருகில். 100 அடி சாலை- செக்டார் 10 & செக்டர் 13, அசோக் நகர். ஓஎம்ஆர் அருகில் – தரமணியில் உள்ள அமெரிக்கன் பள்ளிக்கு எதிரே. வேகக் காட்சி பலகைகள் பகல் மற்றும் இரவில் சாலையில் அனுமதிக்கப்படும் உச்சபட்ச வேக வரம்பை காண்பிக்கும் வகையில் மற்றும் பல்வேறு வாகனங்கள் பலகையைக் கடக்கும் வேகத்தை கண்டறியும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சாலைப் பயணிகள் அவர்களது வேக வரம்பை அறிந்து கொள்ளும் வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இந்த காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேக வரம்பு குறியீட்டை இ-சலான் முறையில் இணைக்கப்படவில்லை. இருப்பினும் 100 ANPR கேமராக்களை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வேகக் காட்சி பலகை மூலம் விபத்துக்களை குறைப்பதற்கும் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இது அமைக்கப்பட்டு உள்ளது.
- பல்நோக்குச் செய்தி பலகைகள் (Variable Message System – Boards) 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், நகரில் 45 பல்நோக்குச் செய்தி பலகைகள் (VMS Boards) நிறுவப்பட்டன. இருப்பினும், அந்த பலகைகள் காலபோக்கில் பழுதடைந்து செயல் இழந்து விட்டன. இதை சீர் செய்வதற்கும் 3 ஆண்டுளுக்கு பராமரிப்பதற்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து, மேற்படி 45 பல்நோக்குச் செய்தி பலகைகள் சோதனை முறையில் சரிபார்க்கப்பட்டு ரூ. 3 கோடி தொகையில் புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அந்த 45 பல்நோக்கு செய்தி பலகைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதனுடைய பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த பல்நோக்கு செய்திப் பலகையில் மகளிர் தினம், குடியரசு தினம், பொங்கல் வாழ்த்து போன்ற பல வகையான வாழ்த்துக்களை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சாலை பயனாளிகளுக்கு அறிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பல்நோக்கு செய்தி பலகைகள் பொதுமக்களையும் போக்குவரத்து காவல்துறையையும் நீண்டகாலம் இணைத்து நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- LED பொருத்தப்பட்ட போக்குவரத்து காவல் நிழற்குடைசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை 309 போக்குவரத்து சந்திப்புகளை தன்னகத்தேக் கொண்டுள்ளது. இந்த சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து நிழற்குடைகளில் மழை, வெப்பம் மற்றும் தூசி ஆகியவற்றிற்கிடையில் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதற்கு அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் 139 போக்குவரத்து நிழற்குடைகள் தகுந்த மின் இணைப்புடன் சரிசெய்யப்பட்டு காவல்நிலையத்தின் பெயர்கள் வர்ணம் பூசப்பட்டு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் LED சுழற்சிசெய்தியுடன் (LED Scroll) கூடிய போக்குவரத்து காவல் நிழற்குடை ரூ.69,50,000 செலவில் நிறுவப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பராமரிப்புச் செலவை ஒப்பந்தகாரர்கள் ஏற்றுகொள்ளும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நன்கு பராமரிக்கப்படும் போக்குவரத்து நிழற்குடைகள் பணியில் இருக்கும் போக்குவரத்து அலுவலர்களுக்கு ஒரு தரமான பணியிடத்தை வழங்கபட்டதில் சாலையைப் பயன்படுத்துபவர்களின் கண்களுக்கு ஒரு அழகிய தோற்றத்தை அளிக்கும்.
மேலும் இதுபோன்ற போக்குவரத்து சுழற்சிசெய்தி நிழற்குடைகள் மூலம் லட்சக்கணக்கான சாலைப் பயனாளர்களுக்கு சாலைப் பாதுகாப்புச் செய்திகளை சென்றடைய வழிவகை செய்யும் வகையில் 139 போக்குவரத்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட அனைத்து சிக்னல்களையும் இயக்குவதற்கு தானியங்கி மற்றும் கையால் இயக்குவதற்கான வசதிகள் உள்ளன. இவ்வாறு இயக்கப்படும் சிக்னல்கள் தனது சிக்னல் கட்டுபாட்டை மாற்றுவதற்கு அருகில் சென்று செயல்படுத்த வேண்டியதாக உள்ளது. இதனால் அந்த சந்திப்பில் மற்ற பகுதிகளுக்கு சென்று போக்குவரத்து நிலையை கண்காணிப்பதற்கும் வாகன ஓட்டிகளின் விதிமீறுபவர்களை சரிசெய்யவும் முடியவில்லை. இதனால் போக்குவரத்து காவலர்களுக்கு உதவும் வகையில் தங்களது சந்திப்பை சீராக இயக்கும் வகையில் ஈவேரா சாலையில் உள்ள 5 முக்கிய சந்திப்புகளில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிக்னல்கள் இயக்கும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செயல்பட்ட காரணத்தினால் இவ்வகையான திட்டத்தை மேலும் அமல்படுத்துவதற்கு அரசுக்கு சமர்பிக்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இந்த ரிமோட் சிக்னல் முறையை அனைத்து சந்திப்புகளிலும் நிறுவதற்கு அறிவிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.27,18,130/-.செலவில் 170 சந்திப்புகளில் ரிமோட் கண்ட்ரோல் முறைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த ரிமோட் சிக்னல் மூலம் போக்குவரத்து காவலர்கள் திறமையாக செயல்படவும், சந்திப்புகளில் வாகன ஓட்டிகளின் சிறந்த ஒழுக்கத்தை உறுதிபடுத்தும் வகையில் இந்த ரிமோட் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் வரையிலான 4 மாதங்களில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில், குடிப்பதற்கு மோர் வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் தற்போது போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்குவதற்காக ரூ.36.54 லட்சம் செலவில் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், துவக்கி வைத்து போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சரத்கர், போக்குவரத்து இணை ஆணையாளர் (தெற்கு) என்.எம்.மயில்வாகன், சமய்சிங் மீனா, தனியார் நிறுவன நிர்வாகிகள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். உலகெங்கிலும் உள்ள சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் நல்ல நடைமுறைகளைப் பயன்படுத்தி சாலைப் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து பாடுபடுவதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தச் சந்தர்ப்பத்தில் GCTP மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும் போக்குவரத்து காவலர்களின் நலன் மற்றும் அவர்களின் பணி வசதிகளுக்காக சீரிய முயற்சிகளை மேற்கொள்வதிலும் உறுதியாக உள்ளது.