கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே அன்று இரவு அனைவரும் வீடு திரும்பி உளமாற உறங்க விட்டாலும் உடல் அசதியால் உறங்கினர்.
விடியற்காலையில் ஜான், முத்து மற்றும் கமிஷனர் ரகசியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரின் கைபேசிக்கும் செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. அதில் வாகன பதிவு எண் ஒன்று குறிப்பிடப்பட்டு, அந்த வாகனம் செல்லும் வழி அமைப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த குறிப்பிட்ட வாகனம் எத்தனை இடங்களில் நின்று செல்லும் மற்றும் அதற்குண்டான நேரமும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் மேற்கண்ட குறிப்புகளை பயன்படுத்தி அந்த வாகனத்தை தவறவிடாமல் அதில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது.
வழக்கம்போல் ஜான் எழுந்து கிளம்ப ஆரம்பித்தார். ஜானுடைய மனைவி கிறிஸ்டினாவும் வழக்கம்போல் தனது வேலைகளை எந்த கேள்வியும் குழப்பமும் இன்றி செய்தார். ஜானும் காலை உணவை முடித்துவிட்டு கிறிஸ்டினாவிடம் தனக்காக மதிய உணவிற்கு காத்திருக்க வேண்டாம் என்றும், தான் வீட்டிற்கு திரும்பி வரும் நேரம் முன்பின் இருக்கலாம் என்றும் கூறிவிட்டு கிளம்பினார். இதை முன்பே அறிந்திருந்த கிறிஸ்டினா சரி என்று தலை அசைத்து ஜானை வழி அனுப்பி வைத்தார். எக்காரணத்தைக் கொண்டும் அந்தக் குறிப்பிட்ட வாகனத்தை தவற விட்டு விடக்கூடாது என்று மும்முறமாக இருந்த ஜான் அந்த வாகனம் நின்று செல்லும் இடங்களில் ஒன்றுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்று சேர்ந்தார்.
பரபரப்பான சாலை போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் அந்த வாகனம் ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தது. வானத்தில் ஏறிக்கொண்ட ஜான் ஒரு இருக்கையில் அமர்ந்த பிறகு முத்துவின் ஞாபகம் வந்தது. ஆனால் தனக்கு வந்த செய்தி முத்துவிற்கு வந்திருக்குமா? என்று மனதிற்குள் எழும்பிய கேள்வி ஜானை அமைதியாக இருக்கையில் அமர வைத்திருந்தது. ஜானின் மன இறுக்கத்தை போக்கும் விதத்தில் அடுத்த நிறுத்தத்தில் முத்துவும் வாகனத்தில் ஏறினார். ஜானின் அருகே வந்து அமர்ந்த முத்து. தனக்கு வந்திருந்த செய்தியை எடுத்து ஜானிடம் காட்டினார். ஜானும் தனக்கு வந்த செய்தியை முத்துவிடம் பகிர்ந்து கொண்டார். இந்த பரிமாற்றத்தை லாவகமாக படம் பிடித்து கமிஷனருக்கு காட்டிக்கொண்டிருந்தது வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கேமரா. சுமார் மூன்றரை மணி நேரம் பயணத்திற்கு பிறகு அந்த வாகனம் ஒரு சுங்கச்சாவடி அருகே வாகனம் எதுவும் இல்லாத இடமாக ஓரம் கட்டி நிறுத்தப்பட்டது. எதுவும் பேசாமல் ஓட்டுநர் எழுந்து வந்து அனைத்து ஜன்னல் திரைகளையும் இழுத்து மூடிவிட்டு இறங்கி சென்றார். ஓட்டுனர் சுமார் 10 அடி வாகனத்திலிருந்து நகர்ந்து சென்ற நிலையில் வாகனத்திற்குள் இருந்த தொலைக்காட்சி அதுவாகவே இயங்கத் தொடங்கியது. தொலைக்காட்சியில் கமிஷனர் நேரலையில் இணைந்திருந்தார்.
“அனைவருக்கும் வணக்கம் நேற்றைய பொழுது உங்கள் அனைவருக்கும் புதிதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன் ஆனால் இன்றிலிருந்து வரும் அனைத்து நாட்களும் உங்களுக்கு புதிது புதிதாக இருக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்றார். தொடர்ந்து பேச தொடங்கிய கமிஷனர் ”உங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்த நோக்கம் ஒரு பெரும் ரகசியத்தை உடைக்கும் முயற்சி . ஆகவே தங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது . இனி நீங்கள் செய்யவிருக்கும் சேவைக்கு பல விதத்தில் தடங்களும், பல நேரங்களில் உங்களுக்கு அசௌகரியங்களும் ஏற்படக்கூடும். ஆனால் இவை யாவும் உங்களுக்கு புதிது அல்ல என்று நம்புகிறேன். உங்களது இத்தனை ஆண்டுகால நேர்மையான பணி நாட்களில் இது போன்ற பலவற்றை நீங்கள் சந்தித்திருப்பீர்கள், அவ்வாறு நீங்கள் சந்தித்து வெளிவந்த மொத்த அனுபவமும், பக்குவமும், அறிவாற்றலும் ஒரு சேர இணைந்து செயல்பட வேண்டிய காலங்கள் இனி என்பதை கண்டிப்பாக உங்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் செய்ய இருக்கும் சேவை பல தலைமுறைகளை காத்து அவர்களுக்கு நீதியையும், நியாயத்தையும், உண்மையையும், ஒருசேர வழங்கி நிம்மதி பெருமூச்சுடன் சந்தோஷமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையப்போகிறது” என்றார். மேலும் பேசிய கமிஷனர் “இந்த நொடி வரை ஏதேனும் ஒரு காரணத்தால் கவனிச்சதறல் ஏற்பட்டு இருந்திருக்குமாயின் அவை ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் இனி வரும் ஐந்து நிமிடங்கள் ஏதேனும் கவனத்திற்கு உண்டான காரணங்கள் இருந்தால் அதை அடையாளப்படுத்தி ஐந்து நிமிடங்களுக்கு உங்களை தொந்தரவு செய்யாத வண்ணம் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்த உங்களுக்கு இரண்டு நிமிட அவகாசம் தருகிறேன் கண்களை மூடி இந்த இரண்டு நிமிடத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்”. என்று கூறிவிட்டு இரண்டு நிமிடம் காத்திருந்த கமிஷனர் மூன்றாவது நிமிடத்தில் “அனைவரின் கவனமும் இந்த நொடியில் ஒருமுகப்படுத்தப்பட்டது என்று நம்புகிறேன்” என்று பேசத் தொடங்கிய கமிஷனர் அனைவருக்கும் வழங்கப்பட்ட தனித்துவமான பேனா, டைரி மற்றும் அந்த கைபேசியின் இயக்க விதிமுறைகளை தெளிவு படுத்தினார். மேலும் செய்தி பரிமாற்றங்களை தயவு செய்து தவிர்க்க வேண்டும் என்று ஜான் முத்துவிடம் செய்தியை காட்டியதையும் முத்து ஜானிடம் செய்தியை காட்டியதையும் குறிப்பிட்டு “இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று கூறினார். மேலும் கடைசி ஒரு நிமிடத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்ததின் நோக்கத்தை விவரிக்க தொடங்கினார் கமிஷனர்.
“இந்திய காவல் பணி அதிகாரி ஆகிய நான் இந்த நாட்டு மக்களுக்கு உண்மையுடன் இருப்பேன் என்றும், எனது கடமைகளில் இருந்து ஒருபோதும் தவற மாட்டேன் என்றும், சட்டம், ஒழுங்கு, நீதியை நிலை நாட்ட எனது சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி நேர்மையுடன் எனது கடமையை ஆற்றி இந்த சமூகத்திற்காக பாடுபடுவேன் என்று உறுதி எடுத்துக் கொண்ட பின்பு தான் வீரமான மக்கள் சேவையின் தியாகச் சின்னமான இந்த காக்கி உடையை நான் அணிந்து இருக்கிறேன். என் போல் தான் நீங்களும் இணைந்து இருக்கிறீர்கள் நீங்கள் அனைவரும் இங்கு இருக்கும் காரணம், இந்த உடைக்குண்டான மரியாதை காத்து கடமை தவறாமல் நேர்மையாக மக்கள் பணியாற்றியதால் தான். இதுவரை நீங்கள் ஆற்றியது ஒரு சதவீதம் மட்டுமே ஆனால் இனி நீங்கள் செய்ய இருக்கும் வேலை மீதி 99 சதவீதம்” என்றார்.
“இன்றிலிருந்து நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இன்றி உண்மைக்கும், நேர்மைக்கும் மட்டுமே கட்டுப்பட்டவர்களாக இருப்பீர்கள் வேறு எதற்கும் நீங்கள் அடிபணிய தேவையில்லை. நம் அனைவரின் கரங்கள் ஒன்று சேர்த்து உடைக்க போகும் ரகசியத்தை கூறுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு மேலும் மூன்று நிமிடங்கள் உரையாடிவிட்டு அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றார்.
மூச்சு விடும் சத்தம் தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல் கமிஷனர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் அவர் பேசி முடித்த பின்பு புத்துணர்ச்சியாகவும், தெளிவாகவும் கட்டவிழ்து விடப்பட்ட இளம் காளைகளை போல் வீரமாகவும், சுதந்திரமாகவும் உணர்ந்தனர். முத்துவிற்கு உள்ளத்தால் உணர்ச்சி பெருக்கெடுத்து உடல் முழுவதும் பரவி புல்லரித்தது. உடலாலும், அறிவாலும் திறமை மிக்க தகுதி வாய்ந்த கமிஷனரின் கீழ் வேலை பார்ப்பதை பெருமையாகவும் கர்வமாகவும் உணர்ந்தார் முத்து. முத்துவைபோலவே அனைவரும் தாங்கள் காவலர் பணியில் சேர்ந்த நாள் இருந்த உற்சாகமும், புத்துணர்ச்சியும், பெருமையும் கிடைக்கப் பெற்றிருந்தனர். அனைவரது பாணியிலும் கம்பீரத்தின் எடை வயதை மீறி சற்று அதிகமாகவே பெருகியிருந்தது. நல்வரவு என்று அனைவருக்கும் ஒரே நேரத்தில் செய்தி வந்து சேர்ந்தது. சரியாக ஓட்டுனரும் வாகனத்தில் ஏறி “ஜன்னலோர திரைகளை தேவைப்பட்டால் விளக்கிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு அவரது இருக்கையில் அமர்ந்து வாகனத்தை தயார் செய்து இயக்க தொடங்கினார்.
மீண்டும் மூன்று மணி நேரம் பயணம் செய்து அனைவரையும் ஏற்றிய இடத்திலேயே இறக்கி விட்டுச் சென்றது வாகனம். வீடு திரும்பிய ஜானின் தோரணையில் சற்று மாற்றம் இருப்பதை கண்ட கிறிஸ்டினா ஜானை பார்த்து உளமாற புன்னகைத்தார். “என்ன டீனா வித்தியாசமா பாக்குற” என்று கேட்ட ஜானிடம் “திருமணமான புதிதில் நீங்கள் வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் போது உங்களை பார்க்க இப்படி தான் இருந்தீர்கள். அப்போது பார்த்தது போலவே இருக்கிறது. இரண்டு நாட்களாக உங்களிடம் மாற்றங்கள் இருந்தாலும் அவை கவலை அளிக்கும் விதமாக இல்லாமல் சந்தோஷமாக உள்ளது . சரி, போய் குளிச்சிட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று கூறிவிட்டு சமையல் அறைக்குள் சென்றார் கிறிஸ்டினா. ஜானும் குளிப்பதற்கு ஆயத்தமாகி தனது உரிமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது “யுவர் ஃபர்ஸ்ட் டாஸ்க்” என்ற தலைப்பில் அந்த தனித்துவமான தொலைபேசியில் செய்தி வந்து சேர்ந்திருந்தது. செய்தியை முழுமையாக படித்த ஜான் குளிக்க அயத்தமானதை மறந்து உடல் புல்லரித்து, பொறுமையாக தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து புன்னகைத்து நின்று கொண்டு கொண்டிருந்தார்.
(தொடரும்…)