தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார் தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றிய சி.சைலேந்திரபாபு பணி ஓய்வு பெற்றதையடுத்து புதிய சட்டம் – ஒழுங்கு போலீஸ் டிஜிபியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.
இதன்படி, தமிழகத்தின் புதிய போலீஸ் டிஜிபி.யாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சைலேந்திரபாபு விடை பெற்றார். புதிய டிஜிபியாக பதவியேற்ற பின் சங்கர் ஜிவால் அளித்த பேட்டியில், “தமிழக காவல் துறையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்ட உள்ளது. காவல் துறையில் போதுமான காவலர்களை நியமிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.
பின்புலம்: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், 1990-ம் ஆண்டில் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பொறியியல் பட்டதாரியான அவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குமாவோனி ஆகிய 4 மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
1993-ல் மன்னார்குடி ஏஎஸ்பி, 1995-ல் சேலம் எஸ்பி, 1997-ல் மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர், 1999-ல் மதுரை எஸ்பி, 2000-ல் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர், 2004-ல் அதே பிரிவு டிஐஜி, 2006-ல் திருச்சி காவல் ஆணையர், 2008-ல் உளவுத்துறை ஐஜி, அதே ஆண்டு சிறப்பு அதிரடிப்படை ஐஜி, 2019-ல் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட ஈரோடு சத்தியமங்கலம் சிறப்பு அதிரடி காவல் படையிலும் பணியாற்றியுள்ளார். அயல்பணியாக டெல்லி சென்று அங்கும் மெச்சத்தகுந்த வகையில் பணி செய்தார். சிறந்த பணிக்காக 2007, 2019 ஆகிய இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றுள்ளார்.
சென்னை பெருநகரின் 108-வது காவல் ஆணையராக 8.5.2021-ல் சங்கர் ஜிவால் பதவியேற்றார். படிப்படியாக ரவுடி, கட்டப் பஞ்சாயத்து, குழு மோதல் உள்ளிட்டவற்றை இரும்பு கரம் கொண்டு அடக்கினார். மேலும், காவல்துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் புகுத்தினார். பாதுகாப்பு பணிக்கு என ஒரு வரைமுறையை கொண்டு வந்தார்.
அதே நேரத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு வாரந்தோறும் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாதம்தோறும் பணியில் சிறந்த ஒருவரை தேர்வு செய்து அவருக்கு நட்சத்திர போலீஸ் விருதையும் வழங்கிவந்தார். சிற்பி, அவள், பறவை, காவல் கரங்கள் போன்ற சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.