அந்த அதிகாரிகள் இருவரும் கூறிய அனைத்தையும் கேட்ட முத்து அந்த அதிகாரிகளை பார்த்து “சார், என்னால அந்த பொருள் எப்படி வாகனத்திற்குள் வந்தது என்பதை கூற முடியாது என்றாலும் அந்த வாகனம் எப்படி இத்தனை வேகமாக இங்கு வந்தது என்று கண்டிப்பாக கூற முடியும். நான் அந்த வாகனத்தை ஒரு முறை பார்க்க வேண்டும்“ என்று கூறினார்.
உடனே ஓட்டுனர் போல் இருந்த வாகனம் ஓட்டி வந்த அதிகாரி “சார், நம்ம கிளம்பின அதே இடத்தில் இருந்து தான் வாகனம் வந்திருக்கு. நம்ம கிளம்பின அதே நேரத்துக்கு தான் கிளம்பி இருக்கும் என்பது நமக்கு கிடைத்த சிசிடிவி நேரத்தை வைத்து நம்மால் கண்டிப்பாக சொல்ல முடியும். எனக்கு தெரிஞ்சு இந்த ரோடு, இந்த வாகன நெரிசல் என எதுவுமே இந்த மூணு வருஷத்துல பெருசா மாறல. அப்படி இருக்கிறப்போ அந்த பழைய வாகனத்தால் எப்படி முடியும்“ என்று கூறிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்ட நீல சட்டை அணிந்த அதிகாரி “அத கண்டுபிடிப்பதற்காக தான் இவரு வந்திருக்காரு. நீங்க கொஞ்சம் பேசாம இருந்தா அவர் வேலையை செய்வார்” என்று வாகனம் ஓட்டி வந்த அதிகாரியை கடிந்து கொண்டார்.
மேலும் முத்துவை பார்த்து “ சார் இப்ப அந்த வாகனம் எங்கு உள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்த உடனே வாகனத்தை எங்கு எடுத்துச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் மீண்டும் அவர்கள் அந்த வாகனத்தை உபயோகப்படுத்தவில்லை என்பது கட்டாயமாக தெரியும். ஏனென்றால் என்ன தான் நீதிமன்றம் அவர்களை விடுவித்து இருந்தாலும் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த நமது அதிகாரிகள் தொடர்ந்து அவர்களை கண்காணிப்பு வளையத்தில் தான் வைத்திருக்கிறார்கள். இருப்பினும் எந்த பயனும் இல்லை. அதனால் தான் உங்கள் உதவி தேவைப்படுகிறது” என்றார்.
மீண்டும் தனது கையில் இருந்த கோப்புகளை புரட்டிப் பார்த்த முத்து “ இதே மாடல் வாகனத்தை நான் பார்க்க வேண்டும். தற்போது முடியுமா?” என்று கேட்டார்.
வாகனம் ஓட்டி வந்த அதிகாரி முத்துவை பார்த்து “ எனக்கு தெரிந்த ஒரு பணக்காரரிடம் இந்த வாகனம் உள்ளது ஆனால் அவர் உபயோகத்திற்கு கேட்டால் தருவாரா என்பது சந்தேகம்தான். அவர் முதன் முதலில் வாங்கிய வாகனம் என்பதால் அதை பொக்கிஷமாக வைத்துள்ளார்” என்றார்.
உடனே முத்து “ அது ஒன்னும் பிரச்சனை இல்ல நான் அந்த வாகனத்தை பாக்கணும் அவ்வளவுதான்“ என்றார்.
நீல சட்டை அணிந்து இருந்த அதிகாரி வாகனம் ஓட்டி வந்த அதிகாரியை பார்த்து “எதுக்காக காத்திருக்கணும் உடனே ஏற்பாடு செய்யுங்க” என்று கூறினார்.
“இப்ப உடனே பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை ஏனென்றால் அவர் ஊரில் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. நான் முயற்சி செய்கிறேன் கண்டிப்பா நாளைக்கு பார்க்கிறதுக்கு 90% ஏற்பாடுகள் என்னால் செய்ய முடியும்“ என்றார் அந்த வாகனம் ஓட்டி வந்த அதிகாரி.
ஒரு நிமிடம் தலையை அசைத்துக் கொண்டு ஏதோ யோசித்த அந்த நீல சட்டை அணிந்த அதிகாரி “ சரி, 90%த்தை 100%மாக மாத்துங்க. நாளைக்கு கண்டிப்பா இந்த வாகனத்தை பாக்கணும்.” என்று கூறிவிட்டு முத்துவை பார்த்து “ கிளம்பலாம் சார்” என்று வாகனத்தில் ஏறி அமர்ந்தார்.
ஓட்டுநர் இருக்கை திரும்ப முயன்ற அந்த வாகனம் ஓட்டி வந்த அதிகாரியை பார்த்து முத்து “சார், இந்த பக்கம் உட்காருங்க நான் ஓட்டுறேன்” என்றார். உடனே வாகனம் ஓட்டி வந்த அதிகாரி உள்ளே அமர்ந்த நீல சட்டை அணிந்து அதிகாரியை பார்த்தார். அவரும் சரி என்று தலை அசைக்க வாகனம் ஓட்டி வந்த அதிகாரி முன் பயணியர் இருக்கையில் ஏரி அமர்ந்தார்.
ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை இயக்கத் தொடங்கிய முத்து உள்ளே அமர்ந்திருந்த இரு அதிகாரிகளிடம் சீட் பெல்ட் இறுக்கமாக அணியச் சொன்னார். மேலும் அவர் அந்த இருவரிடமும் வாகன சோதனையில் பிடிபட்ட வாகனம் அரை மணி நேரம் மூன்று நிமிடங்களில் இந்த தூரத்தை கடந்து இருப்பதால் அதன் சாத்தியக் கூரை தற்போது நாம் ஆராயவிருக்கிறோம். நான் வாகனத்தை வேகமாக இயக்கவிருக்கிறேன் ஆகையால் கவனமாக பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதே போல் அவர்களும் தயாராக அமர்ந்தனர்.
நீல சட்டை அணிந்த அதிகாரி முத்துவை பார்த்து “ஓகே சார் போலாம்“ என்றார். அந்த அதிகாரி ஓகே என்று சொன்ன நிமிடம் சீறிப்பாய தொடங்கிய வாகனம் மிகக் குறைந்த நேரத்திலேயே அந்த சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை தாண்டி இருந்தது. அடுத்த சில நொடிகளில் அந்த வாகனம் செல்லும் உச்சபட்ச வேகத்தை கிட்டத்தட்ட நெருங்கியிருந்தது.
தனது வாழ்நாள் முழுவதும் பெரும்பாலான நேரங்களை வாகனங்களுடன் கழித்ததால் இது ஒன்றும் முத்துவிற்கு பெரிய வேலையாக தெரியவில்லை. வளைவுகளின் வாகனம் லாவகமாக திரும்பியது. பல ஆண்டுகால அனுபவம் வேகத்தோடு மட்டுமல்லாமல் விவேகத்தோடும் அதீத கவனத்தோடும் எந்த விதமான சிறு விபத்துகளுக்கு கூட கடுகளவும் வாய்ப்பு இல்லாமல் வாகனத்தை கையான்டு மிகவும் சாதுரியமாக கொண்டு வந்து நிறுத்தினார்.
முத்துவை ஏற்றிக்கொண்டு கிளம்பிய இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்த போது 27 நிமிடம் 30 நொடிகள் ஆகியிருந்தது. முத்து வாகனத்தை ஓரமாக நிறுத்திய நொடி ஏற்கனவே வாகனம் ஓட்டி வந்த அதிகாரி அவசர அவசரமாக கதவை திறந்து கொண்டு தன் தலையை பிடித்தவாறு வாகனத்தின் முன் ஓரமாக சென்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
பின்னால் அமர்ந்து இருந்த நீல சட்டை அணிந்த அதிகாரிக்கு பயத்தில் உடல் முழுவதும் வியர்த்து சட்டை நனைந்து கைகள் இரண்டும் கைப்பிடியை இறுக்கமாக பிடித்தபடி படபடத்துக் கொண்டு இருந்தது. ஆனால் முத்து சாதாரணமாக இறங்கி சென்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அதிகாரிக்காக தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து கொடுத்து, அவரை தேற்றி, அருகே இருந்த பயணியர் நிழற்குடையில் அமர வைத்து, “சார், நீங்க ஓகே தானே” என்று அவரை பார்த்து கேட்டார்.
தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த அதிகாரி தன் இடது கையில் கட்டை விரலை உயர்த்தி காட்டி தன் நலமாக இருப்பதாக சமிக்கை செய்தார். தண்ணீரை குடித்து முடித்துவிட்டு அந்த அதிகாரி முத்துவை பார்த்து “எப்போதுமே இப்படித்தான் ஓட்டுவீங்களா சார்” என்றார்.
முத்து சிரித்துக் கொண்டே “வாழ்க்கையிலே முதல் முறையாக இன்னைக்கு தான் சார் டிராபிக் ரூல்ஸை மீறி வன்டி ஓட்டி இருக்கிறேன்” என்றார். வாகனத்திற்குள் அமர்ந்திருந்த நீல சட்டை அணிந்து இருந்த அதிகாரி ஒரு வழியாக நிதானத்திற்கு வந்தார். தனது அருகே இருந்த கோப்பை எடுத்து “30 நிமிடங்களுக்குள் கடக்க முடியாது” என்று இருந்த வரியில் முடியாது என்ற வார்த்தையை அடித்து விட்டு கண்டிப்பாக முடியும் என்று எழுதினார்.
(தொடரும்…)