இவ்வுலகிற்கோர் உதயம் கண்டேன் அதையே உதித்து விட்ட சூரியன் என்றார்கள்.
உதித்த சூரியனால் கோடான கோடி மண் விளக்குகள் அணைக்கக் கண்டேன்.
இரவின் காரிருள் நீங்க உதயம் கண்டேன் அதுவே, பௌர்ணமி நிலவென்றார்கள்.
“மா” மலைக்கோர் உதயம் கண்டேன், அதையே அழகுதரும் அருவி என்றார்கள்.
மல்லிகைக்கோர் உதயம் கண்டேன் அதையே நறுமணத்தால் என்றார்கள்.
மலர்வண்டுக்கோர் மகிழ்வுகண்டேன் அதையே சுவைதேன் என்றார்கள்.
முல்லைக்கோர் உதயம் கண்டேன் அதையே பாரிவேந்தனின் தேறுமாகும் என்றார்கள்.
கார்(மழை)கண்ட மயிலுக்கோர் மகிழ்வு கண்டேன் அதையே, போகனின் போர்வை என்றார்கள்.
மானத்துக்கோர் உதயம் கண்டேன் அதையே, மயிரிழக்கா கவரிமான் என்றார்கள்.
மீனுக்கோர் உதயம் கண்டேன் அதையே கண்துஞ்சா விழிப்பென்றார்கள்.
மங்கைக்கோர் உதயம் கண்டேன் அதையே, திருமாங்கல்யம் என்றார்கள்.
மன்னனுக்கோர் உதயம் கண்டேன் அதையே, மணிமகுடம் என்றார்கள்.
மக்களிடம் ஓர் மகிழ்வு கண்டேன் அதையே, நீதி காக்கும் மன்னன் என்றார்கள்.
ஏழைகளிடம் ஓர் மகிழ்வு கண்டேன் அதையே, கொடை வள்ளலென்றார்கள்,
மாலுமிக்கோர் மகிழ்வென்றார்கள் அதையே, கண்டுவிட்ட கலங்கரை என்றார்கள்,
தாய்மகளுக்கோர் மகிழ்வு கண்டேன் அதுவே பொறுமையில் பூமியை மிஞ்சிவிடும் தாய்மை என்றார்கள்,
நீதிக்கோர் மகிழ்வு கண்டேன் அதையே, உண்மை என்றார்கள்,
மணற்கேணிக்கோர் மகிழ்வு கண்டேன் அதையே உண்மை என்றார்கள்,
மனிதனுக்கோர் மகிழ்வு கண்டேன் அதையே நல்மனமாகும் என்றார்கள்,
அதியமானிடம் ஓர் மகிழ்வு கண்டேன் அதையே, ஔவை பெற்ற நெல்லிக்கனி என்றார்கள்,
தந்தைக்கோர் மகிழ்வு கண்டேன் அதையே, அறிவில் முந்தி இருக்கும் தன்மகன் என்றார்கள்
தொந்திசரிய பெற்ற தாய்க்கோர் மகிழ்வு கண்டேன் –
அதையே தன்மகனை சான்றோன் எனக்கேட்டபோது என்றார்கள்.
வாசகரிடம் ஓர் மகிழ்வு கண்டேன் அதுவே, இவ்வரிகளை படிப்பதால் என்றார்கள்,
வரிகளை ஈன்றாரிடம் ஓர் மகிழ்வு கண்டேன் அதுவே,
இவ்விதழில் இடம் பெற்றதால் என்று கூறக்கேட்டேன்
மகிழ்வு மலரட்டும்! நுண்ணறிவு பெறுகட்டும்!
& ஆ.இராமானுசம்