வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக பொதுமக்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் புகார்களை பெற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை சந்தித்து புகார்மனுவை அளித்து வந்தனர். மேலும் உயர் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து புகார் மனு கொடுத்தனர். ஆனால் பொதுமக்கள் பல நேரங்களில் அதிகாரிளை சந்திக்க செல்லும்போது அதிகாரிகள் உயர் அதிகாரிகளை சந்திக்கவோ, மற்ற கூட்டங்களுக்கோ சென்று விடுகின்றனர்.
இதனால் பொதுமக்கள், உயர் அதிகாரிகளை சந்தித்து குறைகளை கூற முடியாத நிலையில் உள்ளனர். ஆனாலும் பொதுமக்களிடம் உயர் அதிகாரில் அலுவலகங்களில் இருக்கும் நேரங்களில் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து வருவது வழக்கமான முறையாகும். மேலும், வாரத்தில் ஒருநாள் பெயரளவில் உயர் அதிகாரிகள் ஒருநாள் சந்திப்பார்கள் என்ற நடைமுறை இருந்துவந்தது. இந்த நிலையில், காவல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்.
மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் வாரந்தோறும் புதன் கிழமை அன்று காலை முதல் மாலை வரை ஆணையகரம் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் பொதுமக்களை சந்தித்து, அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று, அது தொடர்பான விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசே புதன்கிழமை கண்டிப்பாக புகார்களை பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால், பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் நேரடியாக புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.