தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்றாக வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன. அந்த அளவிற்கு மக்களுக்கு வருவாய் துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. இவ்வாறு மக்கள் கூட்டம் அதிகமாக வந்து போகும் இடங்களில் போதுமான கழிப்பறை, குப்பை தொட்டிகள், குடிநீர் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை என பல அடிப்படை வசதி குறைபாடுகள் உள்ளதோடு சிதிலமடைந்த கட்டிடங்களும் பல இடங்களில் பயமுறுத்துவதாக உள்ளது.
போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டு வளாகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல் குவியலாக பழைய வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பதை பார்க்காமல் இருந்தால் அது தான் ஆச்சரியம். இதற்கு தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்களும் விதிவிலக்கல்ல. இங்கும் பயன்படாத வாகனம் மட்டுமல்லாமல் பயன்படாத கட்டிடங்களும் உள்ளன. புழுதி படிந்து, துருப்பிடித்து எதற்குமே உபயோகப்படாத வகையில் கிடக்கும் வாகனங்களை சுற்றிலும் செடி கொடிகள் முளைத்து விஷப் பூச்சிகளும் உள்ளே குடிஇருக்கின்றன.
இவைகளை ஏன் இப்படி போட்டு இருக்கிறார்கள் என்று பார்க்கப் போனால், இவை எல்லாம் வழக்குகளில் தொடர்புடையன வாகனங்களாக இருக்கிறது. வழக்கு முடியும்வரை மனிதர்கள் இருக்கலாம், வாகனங்கள் உருப்படியாக இருக்குமா?. அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவைகளை கடந்துதான் தினமும் போகிறார்கள்.
இவைகளை எதற்காவது பயன்படுத்தலாம் என்று எண்ணிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருந்ததாவது:- பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்துவதற்கான வழிகளை காண முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும்.
அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வர மாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகி விடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களா? காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் பல்வேறு வழக்குகளில் வாகனங்களை பிடிக்கிறார்கள். அவ்வாறு பிடிக்கும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அபராதம் செலுத்தி எடுத்து செல்ல அறிவுறுத்த வேண்டும். வாகனங்கள் பல ஆண்டுகளாக வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணானால் ஏலம் விடும்போது மிகவும் குறைவான தொகையே கிடைக்கும். அதிக ஆண்டுகள் வாகனங்கள் கிடப்பதால் அதை பயன்படுத்த முடியாமல் எடைக்கு தான் போடவேண்டிய நிலை உள்ளது. பெரிய குற்ற வழக்குகள் தவிர பிற வழக்குகளில் பிடிபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து விரைந்து அனுப்ப வழிவகை செய்தால் போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களும் சுத்தமாக இருக்கும்.
வாகனங்களை விரைவாக விற்பதன் மூலம் அதற்கு குறைந்த அளவில் செலவு செய்து அவற்றை நீண்ட காலங்கள் பயன்படுத்தவும் முடியும். இதன் மூலம் புதிய வாகனங்கள் வாங்க ஆசை இருந்தும், போதிய நிதி இல்லாதவர்கள் இந்த வாகனங்களை வாங்கி பயன் பெற முடியும். வாகன பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், வழக்குகளில் பிடிக்கப்படும் வாகனங்களை ஆண்டுக்கணக்கில் அப்படியே போடுவதால் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தாலுகா அலுவலக வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களில் பெரும்பாலானவற்றில் பேட்டரிகள் அப்படியே இருக்கின்றன. 2030-ம் ஆண்டுக்குள் பேட்டரி வாகனங்களை பெருமளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்து வருகிறது. அதற்கு முன்பாக இதுபோன்ற கைவிடப்பட்ட வாகனங்களை உரிய வகையில் அழித்தாலே பெருமளவு மண்வளமும், நீர் ஆதாரமும் காக்கப்படும். இதை ஒரு பிரச்சனையாக கருத்தில் கொள்வார்களா ஆட்சியர்கள்?