கிரைம் பிராஞ்ச் போலீஸார் எனக்கூறி நூதன மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆன்லைன் பணப்பரிமாற்றப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் எண்களுக்கு ‘லிங்க்’ அனுப்பி, முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைகாட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. தற்போது, காவல்துறையினர் பெயரிலேயே நூதன மோசடியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது: சைபர் கிரைம் மோசடி சம்பவங்களைத் தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போதைய நிலையில் இரண்டு விதமான மோசடி புகார்கள் அதிகம் வருகின்றன. முதலாவது, முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப அதிக லாபத் தொகை தருவதாக கூறி செய்யும் மோசடி.
அறிமுகம் இல்லாத நபர், வாட்ஸ் அப், டெலிகிராம் எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பி தொடர்பு கொண்டு பண ஆசை காட்டும் வார்த்தைகளை கூறுகிறார். முதலில் இலவசமாக அந்த வேலைகளை செய்து ரூ.1000, ரூ.1,500 லாபத் தொகை கிடைப்பது போல் செய்கிறார். பின்னர், நீங்கள் ப்ரீமியம் வாடிக்கையாளராகி விட்டீர்கள் என ஆசை வார்த்தை கூறி, அதிக தொகையை முதலீடு செய்ய வலியுறுத்துகிறார். அதை நம்பி முதலீடு செய்தவுடன் அந்நபர் ஏமாற்றிச் சென்று விடுகிறார்.
தினமும் சராசரியாக 4 முதல் 6 புகார்கள் முதலீட்டு மோசடி தொடர்பாக வருகிறது. அதில் ரூ.2 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.19 லட்சம் ஏமாந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். இரண்டாவதாக, குறிப்பிட்ட நபர்களின் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்துகொண்டு தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், மும்பை கிரைம் பிராஞ்ச் போலீஸார் பேசுவதாக தெரிவிக்கின்றனர்.
பின்னர், வீடியோ அழைப்பு, செல்போன் அழைப்பு மூலம் பேசி, ‘நீங்கள் பார்சல் மூலம் போதைப் பொருள் கடத்துவதாக தகவல் வந்துள்ளது. உங்களை விசாரிக்க வேண்டும்’ என கூறி மிரட்டுகின்றனர். போலீஸார் யாரும் இவ்வாறு செய்ய மாட்டார்கள். உங்களிடம் பயத்தை ஏற்படுத்தி பணத்தை நூதனமாக வசூலித்து மோசடி செய்கின்றனர்.
இது போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வகை மோசடி தொடர்பாக சில புகார்கள் வந்துள்ளன. தேவையற்ற லிங்க்குகளை தொடுவதை தவிர்க்க வேண்டும். போலீஸார் எனக்கூறி மிரட்டும் நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.