நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஜானுக்கு திடீரென்று தனது செல்லப்பிராணியின் சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. அரைகுறை தூக்கமாக கண்விழித்து சத்தம் கேட்கும் திசை நோக்கி நடக்க தொடங்கினார் ஜான். வீட்டின் பின்புற கதவுகளை திறந்த போது சூசியின் சத்தம் நின்று போனது. செல்லப்பிராணி தங்குவதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட அந்த சிறிய வீடு போன்ற அமைப்பில் சென்று பார்த்த போது அங்கு சூசி இல்லை. அதன் சத்தமும் நின்று போய் இருந்ததால் தற்போது அது எங்கு இருக்கிறது என்று ஜான் தேடத் தொடங்கினார். வீடு முழுவதும் சுத்தி வந்த ஜான் அது எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவசரமாக தன் படுக்கையறைக்கு திரும்பிய ஜான் தன் மனைவியை எழுப்பினார் “டீனா கெட் அப் சூசிய காணோம்“. ஆர்ப்பாட்டம் இல்லாமல் எழுந்த கிறிஸ்டினா “என்ன ஜான் சொல்றீங்க நல்லா பாத்தீங்களா?”என்றார். ”சூசி கத்தற சத்தம் கேட்டு தான் நான் எழுந்தேன் ஆனால் நான் கதவை திறக்கறதுக்குள்ள சத்தம் நின்றுச்சு வீடு ஃபுல்லா தேடிட்டேன் எங்கேயுமே இல்லை நீ எதுக்கும் இன்னொரு முறை தேடு. நான் காம்பவுண்டுக்கு வெளில போய் பாத்துட்டு வரேன்” என்று அவசர அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டிருந்தார் ஜான்.
உடனே கிறிஸ்டினா “ஜான் ரிலாக்ஸ், நல்லா எல்லா இடமும் தேடி பாத்தீங்களா? என்றார். ஜான் சற்று எரிச்சலுடன் “டீனா! வீடு ஃபுல்லா சுத்தி வந்துட்டேன் என் கண்ணிலே தென்படவில்லை” என்றார். புன்னகைத்த கிறிஸ்டினா “ஜான் நீங்க தேடுறது ஒரு அனிமல் அக்யூஸ்ட் இல்ல வீடு ஃபுல்லா கீழே சுத்தி வந்து பார்த்தீங்களே கொஞ்சம் மேல ஜன்னல் ஸ்லாப், மொட்டை மாடி இங்க எல்லாம் பாத்தீங்களா? சூசி எப்பவுமே இப்படித்தான் நாட்டி எங்காவது சிக்கலான இடத்தில் போய் உட்கார்ந்துட்டு யாராவது காப்பாத்த வருவாங்களான்னு கத்திக்கிட்டு இருக்கும்“ என்று ஜானிடம் கிறிஸ்டினா கூறியதும் நொடி தாமதம் இல்லாமல் தனது செல்லப் பிராணியின் பெயரை சொல்லி கூப்பிட்டுக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றார். மேலிருந்து கீழ் பார்த்தவாரே மீண்டும் ஒருமுறை வீட்டில் அனைத்து சுவர்களையும் சுற்றி வரும்பொழுது ஒரு வழியாக சூசி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். கிறிஸ்டினா கூறியதை போலவே ஏசி பொருத்தப்பட்டிருக்கும் ஜன்னல் ஸ்லாப்பில், ஏசிக்கும் ஜன்னல் ஸ்லாப்பிற்கும் நடுவே அமர்ந்து கொண்டு சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தது அந்த செல்லப்பிராணி. உடனடியாக கீழே இறங்கிய ஜான் தனது வீட்டிற்கு பின்னால் சென்று ஏணிப்படி எடுத்து அந்த குறிப்பிட்ட ஸ்லாப்பில் சாய்த்து வைத்தார். நொடி தாமதம் இல்லாமல் நேர்த்தியாக சூசி கீழே இறங்கியது. கிறிஸ்டினா ஒரு தட்டில் உணவை எடுத்து அந்த செல்லப்பிராணியின் பிரத்தியேக வீட்டுக்குள் வைத்த உடன் சூசி வேகமாக அதன் இருப்பிடத்தில் சென்று அமர்ந்து கொண்டு உணவருந்த தொடங்கியது. ஜான் வீட்டுக்குள்ளே சென்று அமர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.
கிறிஸ்டினா தனது கணவருக்காக காப்பி போட்டு எடுத்து வந்திருந்த போது ஜான் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தார். கிறிஸ்டினா காப்பியை மேஜை மேல் வைத்துவிட்டு ஜான் அருகே அமர்ந்தார் “என்னாச்சு ஜான் எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருகிங்க..வேலை விஷயமா? “ என்றார். “இல்ல டீனா இத்தனை நாள் வேலை வேலை என்று வீட்டை கவனிக்க எவ்வளவு தவறியிருக்கிறேன் என்பது இப்பதான் புரியுது வீட்ல என்ன நடக்குதுன்னு எதுவுமே எனக்கு தெரியாது ஆனால் உனக்கு ஒவ்வொரு சின்ன விஷயமும் தெரியும். எனக்கு எப்பவுமே நீ ஒரு ஒன்டர்புல் பார்ட்னர் ஆனால் நான் உனக்கு ஒரு நல்ல பார்ட்னரா இல்லையான்னு எனக்கு தெரியல டீனா” என்று குற்ற உணர்ச்சியோடு கூறினார் ஜான்.
முகத்தில் புன்னகையுடன் காப்பியை எடுத்து ஜானுக்கு கொடுத்தார் கிறிஸ்டினா. ஜான் கையில் வாங்கிக் கொண்டார். “ஜான் இவ்வளவு யோசிக்க அவசியமில்லை. நீங்க வேலை வேலை என்று ஓடுனது யாருக்காக நமக்காகத்தானே இப்ப என்ன திடீர்னு என்ன மட்டும் பிரிக்கிறீங்க. உங்களுக்கு வீட்டுக்கு வெளியில் வேலை எனக்கு வீட்டுக்குள்ள வேலை. உங்க வேலை எனக்கு தெரியாது அதே மாதிரி தான் உங்களுக்கும் இருக்கும். எப்பவும் நீங்க வேலைக்கு போயிட்டு டயர்டா வந்து படுத்து நல்லா தூங்கிடுவீங்க. நேத்து நீங்க வெளிய எங்கயோயும் போகல அதான் நல்லா தூங்காம இருந்ததுனால சூசி போட்ட சவுண்ட் உங்களை சீக்கிரமா எழுப்பிருச்சு. அதனால இது உங்களுக்கு தான் புதுசு எனக்கும் சூசிக்கும் இது பழகி போன ஒன்னு. இதுல குற்ற உணர்ச்சியா நீங்க பீல் பண்ண ஒன்னும் இல்ல. காபி குடிச்சிட்டு போய் குளிச்சிட்டு வாங்க நான் டிபன் ரெடி பண்றேன்” என்று ஜானின் தோள்களில் தட்டி விட்டு கிறிஸ்டினா சமையல் கட்டுக்குள் சென்றார்.
என்னதான் பிரச்சனை ஆறுதலாக பேசியிருந்தாலும் ஜான் மனதில் ஒரு ஓரத்தில் நாம் குடும்பத்தை கவனிக்க போதிய நேரம் ஒதுக்கவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி கேள்வி அவரை அரித்துக் கொண்டே இருந்தது. மறுமுனையில் முத்து நீண்ட காலத்திற்குப் பிறகு நிம்மதியாக படுத்து உறங்கி எழுந்திருந்தார். மற்றும் குடும்பத்தார் வந்து சேர்ந்ததால் ஏதோ விடுமுறை கொண்டாட்ட விசேஷம் போல் முத்துவிற்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இருப்பினும் தான் அந்த வாகனத்தை பார்ப்பதற்கு இன்று அந்த பணக்காரர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது மறந்து போகவில்லை. வழக்கமாக வேலைக்கு அவசர அவசரமாக கிளம்பும் முத்து தற்போது எந்த வித அழுத்தமும் இல்லாமல் நிம்மதியாகவும் நிதானமாகவும் கிளம்பினார்.
எப்போதும் இல்லாத வகையில் காலை உணவை நீண்ட நேரம் ரசித்து ருசித்து பொறுமையாக உண்டு முடித்து விட்டு கிளம்பினார். முத்து அந்த குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கும் அந்த அதிகாரிகள் இருவரும் அந்த பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
மூவருடன் கிளம்பிய வாகனம் சுமார் 2 மணி நேரம் பயணத்திற்கு பிறகு ஒரு பிரம்மாண்டமான கதவின் முன் சென்று நின்றது.” சார் இதுதான் நான் சொன்ன வீடு இங்கு தான் அந்த குறிப்பிட்ட வாகனத்தைப் போல ஒன்று உள்ளது” இன்று அந்த அதிகாரி விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கையில் வீட்டின் காவலாளி வந்து “யார் சார் நீங்க என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்” என்று கேட்டார். வாகனத்தை ஓட்டி வந்த அந்த அதிகாரி காவலாளியிடம் “ சார் கிட்ட நான் இன்னைக்கு வரதா சொல்லி அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன் “ என்றார்.
கையில் வைத்திருந்த ஒரு கையடி புரட்ட தொடங்கி அந்த காவலாளி “சார் உங்க பேர் என்ன ?”என்று கேட்டுக் கொண்டிருக்கையில் காவலாளியின் கைபேசியில் தொடர்பு கொண்ட அந்த முதலாளி அவர்களை உள்ளே அனுப்ப காவலர்களுக்கு கட்டளையிட்டார். காவலாளியும் மறுவார்த்தை இல்லாமல் கதவை திறந்து அவர்களை உள்ளே அனுப்பினார். உள்ளே நுழைந்த முத்துவிற்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன..
(தொடரும்…)