வேதாரண்யத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குரவப்புலம் ரயில்வே கேட் வழியாக காரில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குரவப்புலம் ரெயில்வே கேட் அருகே சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் காரில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் 300 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இந்த காருக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரில் சென்றவர்கள், வழியில் போலீசார் சோதனை செய்கிறார்களா? என கண்காணித்தபடியே சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டரில் வந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள், அகஸ்தியன்பள்ளியை சேர்ந்த ரவி(வயது 53). கோடியக்காட்டை சேர்ந்த லட்சுமணன்(43), தேத்தாகுடியை சேர்ந்த ரவி(28), அதே பகுதியை சேர்ந்த வேதமணி(27), மதுரையை சேர்ந்த மாயகிருஷ்ணன்(29), பெரம்பலூரை சேர்ந்த குமார்(44) ஆகிய 6 பேர் என்பது தெரிய வந்தது.
இவர்கள் 6 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மதுரை வழியாக காரில் வேதாரண்யத்துக்கு கொண்டு வந்து பின்னர் அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், வேதாரண்யன் காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் வேதாரண்யம் போலீஸ் அலுவலகத்துக்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.