தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்காக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான காவல்துறையினருக்கு ஓய்வுபெற்ற டிஜிபி ஜாங்கிட் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற டிஜிபி ஜாங்கிட் தெரிவித்ததாவது, “இன்றைக்கு தாம்பரம்ல ஒரு போலீஸ் என்கவுண்டர் நடந்தது.. இந்த என்கவுண்டர்ல இரண்டு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சுடப்பட்டனர். இதேபோல் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி 2001ம் ஆண்டில், அதாவது 15 வருடத்திற்கு முன்னாடி நானும் என்னுடைய டீமும், சரித்திர பதிவேடு குற்றவாளியான வெள்ளை ரவியையும் அவரது குற்றவாளிளையும், மொத்த இரண்டு பேரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு என்கவுண்டரில் சுட்டோம்.
எல்லாருக்கும் வெள்ளை ரவியை பற்றி தெரியும். அவர் சென்னையில் எவ்வளவு குற்றங்களுக்கு காரணமாக இருந்தார் என்பது அப்போது தெரியும். அந்த என்கவுண்டருக்கு பின்னர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் ஒரு நல்ல தாக்கம் இருந்தது. அதே மாதிரி இந்த தாம்பரம் என்கவுண்டர் சட்டம்ஒழுங்கு விஷயத்தில் நல்ல தாக்கம் இருக்கும்.
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் மற்றும் தாம்பரம் கமிஷ்னர் அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்களுக்கும் அவர்களுடைய அணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார். தீரன் அதிகாரம் படத்தில் வரும் பவாரியா கொலை கும்பலை பிடித்தது முன்னாள் டிஜிபி ஜாங்கிட் தலைமையிலான காவல்துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுவாஞ்சேரி என்கவுண்டர் எப்படி நடந்தது?
சென்னை தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கம் காரணைபுதுச்சேரி-அருங்கால் செல்லும் சாலையில் ஆகஸ்ட் 1ம் தேதி அதிகாலை 3.30மணி அளவில் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில், உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் சிலர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பொதுவாக அதிகாலை நேரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி, தப்பி சென்ற அல்லது தேடப்படும் பழைய குற்றவாளிகள் சிக்கினால் அவர்களை உடனே கைது செய்வார்கள். மேலும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும் சோதனை நடத்துவார்கள். அப்படித்தான் வாகன சோதனை நடத்தினார்கள்.
அதிகாலையில் கீரப்பாக்கத்தில் இருந்து காரணைபுதுச்சேரி நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்த. சந்தேகத்தின் பேரில் அந்த காரை வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் அதி வேகத்தில் செல்ல முயன்றது. அப்போது சட்டென சாலையோரம் நின்ற போலீஸ் வாகனம் மீது அந்த கார் மோதியது. இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைக்க முயன்றார்கள்.
இதனால் காரில் இந்த 4 பேர் சட்டென கோபத்துடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கண் இமைக்கும் நேரத்தில் கீழே இறங்கினர். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை போலீசார் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று எச்சரித்தனர். இருப்பினும் அவர்கள் 4 பேரும், போலீசாரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.
அந்த கும்பல் அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதனை வெட்டினர். இதில் அவரது இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தலையில் அவரை வெட்ட முயற்சித்தனர். சுதாரித்து கொண்டதால் சப்-இன்ஸ்பெக்டர் உயிர்தப்பினாராம்.
இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் ஆகியோர் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த 4 பேரை நோக்கி சுட தொடங்கினார்களாம். இதனை அறிந்த 4 பேரும் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்தி பிடிக்க முயன்றார்கள். அப்போது 2 பேரை போலீசார் விரட்டி சென்று துப்பாக்கியால் 2 ரவுண்டு சுட்டிருக்கிறார்கள்.. இதில் குண்டு பாய்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்கள். மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டார்கள்.
காயம் அடைந்த இரண்டு பேரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். அங்கு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், இரண்டு பேரும் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் காரில் இருந்த 4 பேரும் ரவுடிகள் என்பதும். அதில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பேர் பிரபல ரவுடிகள் என்பதும் தெரியவந்தது. மண்ணிவாக்கம், சுவாமி விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்ற சோட்டா வினோத் (வயது 39) என்பதும், ஓட்டேரி போலீஸ் நிலைய சரித்திர பதிவேட்டில் ‘ஏ பிளஸ்’ பிரிவில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வினோத் மீது கொலை , கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம்.
கொல்லப்பட்ட இன்னொருவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ரமேஷ் (32) என்பதும், இவர் மீதும் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். இதனிடையே
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கூடுவாஞ்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி ஊரப்பாக்கம் ஆதனூரை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி சக்கரபாணியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய சரமாரியாக வெட்டிய வழக்கில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய 2 ரவுடிகள் முக்கிய குற்றவாளியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போலீஸாரை சந்தித்து தமிழக டிஜிபி விசாரணை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, ‘’வாகன சோதனையின் போது ரவுடிகள் போலீஸாரை தாக்க முயன்றுள்ளனர். அதனால் தற்காப்பிற்காக என்கவுண்டர் செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான உதவி ஆணையர் நலமுடன் உள்ளார்; ரவுடிகள் மீது பல பிரிவுகளில் வழக்கு நிலுவையில் உள்ளன’’ என்றார்.