
ஓர் அண்ணாக இருந்து உன்னை முழுமையாகப் படிக்கவைப்பது என்னோட பொறுப்பு. எதற்கும் கலங்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து எனக் கூறி மாவட்ட ஆட்சியர் உதவியதுடன், உற்சாகமும் படுத்தினார்.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 16). இவருக்குப் பெற்றோர் இல்லை. இவருடைய தாய்மாமன் பழனி, அவரின் மனைவி மல்லிகா கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண், ஓர் ஆண் என இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.

ரமேஷுக்கு அப்பா, அம்மா இரண்டு பேரும் இல்லாததால் ரமேஷை சின்ன வயதிலிருந்தே பழனியும், மல்லிகாவும் வளர்த்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த ரமேஷ், 266 மதிப்பெண் எடுத்ததுடன் மேற்கொண்டு டிப்ளமோ படிக்க ஆசைப்பட்டிருக்கிறார்.
வயதாகிவிட்டதால் உடல்நிலை காரணமாக பழனிக்கு முன்புபோல் எல்லா நாளும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. போதிய வருமானம் இல்லாமல் தவித்திருக்கிறார். தாங்கள் வசிக்கும் கூரை வீட்டைக்கூட சரிசெய்ய முடியாத நிலையில் குடும்ப வருமானம் இருந்திருக்கிறது. சின்னக் குழந்தையாக விட்டுச் சென்ற பிறகு பல கஷ்டங்களுக்கிடையில் பெற்றோராக இருந்து வளர்த்த மாமா, அத்தை சிரமத்தில் இருப்பதை உணர்ந்த ரமேஷ் படிப்பை மறந்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காக்க நினைத்திருக்கிறார்.

அவனது ஆசையை நிறைவேற்ற முடியாத சூழலில் அவர்கள் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில் சமூக ஆர்வலர் கார்த்தி, ரமேஷின் நிலையை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கவனத்துக்குக் கொண்டுசென்றார். பெற்றோர் இல்லை, சிறு வயதிலேயே துரத்தும் வறுமை இவற்றுக்கிடையே தொடர்ந்து படிக்க நினைக்கும் ரமேஷுக்கு வேண்டிய உதவிகள் செய்வது தன்னோட கடமை என்றதுடன் அதற்கான ஏற்பாட்டை ஆட்சியர் செய்தார்.
காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பிரிவில் ரமேஷை சேர்த்துவிட்டார். பின்னர் சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் அமைப்பு மூலமாக நிதி கிடைக்கச் செய்து ரமேஷின் படிப்பு தொடர்வதற்கும் உதவியிருக்கிறார். சிரித்த முகத்துடன், நிறைந்த மனதுடன் தற்போது மாணவன் ரமேஷ் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருக்கிறான். படிக்கவைக்க வழியில்லாமல் கண்கலங்கித் தவித்து நின்ற பழனி, மல்லிகா இருவரும் மாவட்ட ஆட்சியரின் செயலால் நெகிழ்ந்திருக்கின்றனர்.
இது குறித்து ரமேஷிடம் பேசினோம், “சின்ன வயசிலிருந்தே கஷ்டத்தை மட்டும் பார்த்து வளர்ந்தவன் நான். அத்தை மல்லிகா அம்மாவாக மாறி சொந்த மகனாக என்னை அரவணைத்து வளர்க்கவில்லையென்றால், நான் என்னவாகி இருப்பேன் என்று தெரியாது. டிப்ளமோ படித்தால் சீக்கிரம் வேலை கிடைக்கும். குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால், அதற்கான வாய்ப்பும் வசதியும் இல்லை. திக்கற்று நின்ற என்னோட நிலை கலெக்டர் சார் வரை சென்றது. படிப்பு மட்டும் கிடைக்கச் செய்துவிட்டால்போதும் அதைவிட பெரிய சொத்து ஒன்றும் இல்லை என்றவர் என்னைக் கல்லூரியில் சேர்த்து படிக்கவைப்பதற்கான ஏற்பாட்டை செய்து கொடுத்தார். கல்லூரிக்குச் செல்வதற்கான போக்குவரத்து செலவு உட்பட வருடத்துக்கு சுமார் ரூ.20,000 செலவாகும்.
மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் தனியார் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர் பணம் வழங்கியதன் மூலம் எனக்கு இது வரை ரூ. 40,000 கிடைத்திருக்கிறது. `ஓர் அண்ணாக இருந்து உன்னை முழுமையாகப் படிக்கவைப்பது என்னோட பொறுப்பு. எதற்கும் கலங்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து’ என ஆட்சியர் உற்சாகப்படுத்தினார். இதன் மூலம் எனக்கான புதிய வாசல் திறந்திருக்கிறது” என்றார்.
