”ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக பாய்ந்த இந்நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது” என்று தென்காசி பெண் விஞ்ஞானியின் அண்ணன் ஷேக் சலீம் தெரிவித்தார்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தின் திட்ட இயக்குனரான பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி, தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான்நபி பள்ளிவாசல் ஜமாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இதனால் செங்கோட்டை சுலைமான்நபி பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் நிகர் ஷாஜியின் அண்ணன் பேராசிரியர் ஷேக் சலீம் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
‘ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். இது அனைவருக்குமே பெருமை அளிக்கிறது. மேலும் இதன் திட்ட இயக்குனராக என்னுடைய தங்கை நிகர் ஷாஜி பணியாற்றுவது எங்களுடைய குடும்பத்தினருக்கும், செங்கோட்டை மக்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. எனது தங்கை பயின்ற அரசு பள்ளி, கல்லூரியிலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இன்றைய நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்ததை நினைத்து பூரிப்படைகிறோம்.
என்னுடைய தங்கை நிகர் ஷாஜி சிறுவயதில் இருந்தே நன்றாக படிக்க கூடியவர். பிளஸ்-2 தேர்வில் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். மேலும் உயர்கல்வியிலும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனைகளை புரிந்தார். எந்த சோதனைகளையும் தனது விடாமுயற்சியால் வென்று சாதிக்க கூடியவர். தற்போது இஸ்ரோவுக்கும், நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இது அவருடன் இணைந்து கூட்டாக பணியாற்றிய அனைவருக்குமான வெற்றி, இந்தியாவின் வெற்றி ஆகும்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது மகளின் திருமணத்துக்காக செங்கோட்டைக்கு தங்கை நிகர் ஷாஜி வந்து சென்றார். பின்னர் ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவும் பணியில் முழுமுயற்சியுடன் ஈடுபட்டு வந்தார். நிகர் ஷாஜி பயின்ற செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அவருக்கு விரைவில் பாராட்டு விழா நடத்த உள்ளனர். இதில் பங்கேற்க வருவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.