மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆண்டு தோறும் ஜார்ஜ் ரான்சன் பிரனேஷ் நினைவு கூடைப்பந்து கழகம் (GRP) மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியினை நடத்தி வருகிறார்கள். அதேபோன்று இந்த ஆண்டும் 12.08.2023 மற்றும் 13.08.2023 ஆகிய இரண்டு தினங்கள் போட்டியானது மிகவும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
சீர்மிகு சீர்காழி நகரினில் தங்களது பள்ளி வாழ்க்கையின் தொடக்கம் முதலே தங்களோடு இன்பத்திலும், துன்பத்திலும் அனைத்து நிகழ்வுகளிலும் பயணித்து மரித்துப்போன நண்பனுக்காக நண்பர்கள் அவரின் நினைவுகளை பறைசாற்றுகின்ற வகையிலே இந்த போட்டியினை அவரின் நினைவாக ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். இவர்களோடு மறைந்த நண்பனின் குடும்பத்தாரும் இவர்களோடு கைகோர்த்து இந்த நிகழ்வினை மிகவும் சிறப்பாக நடத்துவது மேலும் ஒரு சிறப்பம்சமாகும். ஒரு நண்பனுக்காக ஆண்டுதோறும் இவர்கள் நடத்தி வருகின்றனர் என்றால் அவர் இந்த விளையாட்டின் மீது கொண்டிருந்த அளவுகடந்து வைத்திருந்த பற்று, ஈடுபாடு மற்றும் நண்பர்கள் மீது வைத்திருந்த பாசமும் நற்செயல்களே ஆகும்.
இந்த போட்டியானது கடந்த 2018ல் தொடங்கி இன்றுவரை சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியானது மாநில அளவிலான போட்டிகளாக நடத்தி வருகின்றார்கள். தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த அணிகள் இப்போட்டியில் கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இந்த ஆறாம் ஆண்டு மாநில அளவிலான நிஸிறி நினைவு போட்டியின் துவக்க விழாவிற்கு முனைவர் தம்பைய்யா பிரபுதாஸ் அவர்கள் தலைமை வகித்தார்.
ச.மு.இ மேனிலைப்பள்ளியின் துணை தலைமை ஆசிரியரும், உடற்கல்வி ஆசிரியருமான முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர் மார்கண்டன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மயிலாடுதுறை கிளை மேலாளர் T.கபிலன், தொழில்அதிபர்கள் மணிகண்டன், நவீன், தினேஷ் மற்றும் தலைமை காவலர் சாலமன் மற்றும் நண்பனின் சகோதரர் சார்லஸ் ஆகியோரால் இப்போட்டியானது துவக்கி வைக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கக் கூடிய உடற்கல்வி ஆசிரியர் G.ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். எஸ்.வணங்காமுடி (வங்கி ஓய்வு) வரவேற்று மகிழ்ந்தார். சிறப்பு அழைப்பாளர்களாக விவேகானந்தா கல்வி குழும தாளாளர் கே.வி.ராதாகிருஷ்ணன், சீர்காழி காவல்ஆய்வாளர் சிவக்குமார், எல்.எம்.சி பள்ளியின் தலைமை ஆசிரியை கே.ரூபி சாந்தகுமாரி, சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, விளந்திட சமுத்திரம் ஊராட்சி மன்றத்தலைவர் ரமணிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற GRP நினைவு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியின் சுழற்கோப்பையை நாகை என்.பி.சி அணியினர் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தனர். பாலர்ஸ் பாண்டி அணியினர் இரண்டாம் இடத்தையும், ஓய்.சி.சி அணியினர் மூன்றாம் இடத்தையும் மற்றும் சீர்காழி GRP அணியினர் நான்காம் இடத்தையும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட காவல்ஆய்வாளர் புயல்.பாலச்சந்தர் அவர்கள், விளையாட்டின் மீது கொண்டிருந்த பற்றினால் தான் இந்த அளவில் உயர்ந்து நிற்கிறேன். உண்மையாக விளையாட்டினை நேசிப்பவர்களை விளையாட்டு ஒருபோதும் கைவிட்டதில்லை என்று விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகத்தில் தன் பேச்சின் வாயிலாக வழங்கினார். இதேபோன்றே சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் அவர்களும் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார். மேலும் இந்த நிகழ்வினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வருகின்ற அந்த நண்பர்களையும் பாராட்டி மகிழ்ந்தார்.
மேலும் கமிட்டி உறுப்பினர்கள் வணங்காமுடி, பாலசங்கரன், சந்திரமோகன் கலந்துகொண்டார்கள். விழா மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்களாக GRP நினைவு கூடைப்பந்து கழகத்தின் தலைவர் காந்திநாதன், பொருளாளர் வடிவேலு, எஸ்.பி கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் சார்லஸ் தினேஷ், சதீஷ், கணேஷ், கங்காதரன், வினோத் திறம்பட செயல்பட்டனர். மேலும் நிஸிறி நினைவு கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் ராஜூ நன்றி கூறினார்.
இந்த நிகழ்விற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்கள், மூத்த விளையாட்டு வீரர்கள், வியாபார சங்கத்தினர், காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பல விளையாட்டு கழகங்கள் அனைவரையும் இவர்கள் நன்றியோடு நினைவு கூறுகிறார்கள்.