பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவின் துணை ஆணையர் கோ.வனிதா அவர்கள் இரவில் வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்காக விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது, “இந்த அரசாங்கம் பெண்களுக்கு முக்கியத்தும் அளித்து பல அமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக மாவட்டம் தோறும் One Stop Centre என்ற அமைப்பின் மூலம் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அல்லது வெளியேறும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வகை செய்கின்றது.
இரவில் வீட்டில் இருந்து வெளியேறும் பெண்கள் அல்லது வெளியேற்றப்படும் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக எங்கு செல்வது என்று பயப்படாமல் மாவட்டம் தோறும் ஏற்படுத்தப் பட்டுள்ள இந்த அமைப்பின் இடத்தை உபயோகப்படுத்துவதன் மூலம் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இது மாவட்டம் தோறும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளில் தொடர்பில் இயங்கும் இடமாகும்.
இந்த அமைப்பை தேடி ஆதரவற்று வரும் பெண்களுக்கு தேவையான முழுமையான மருத்துவ வசதியும் தேவையான சட்ட ஆலோசனைகளும் தடை இன்றி கிடைக்கப்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சமூகநல மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் இங்கு வரும் பெண்கள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தங்கிக் கொள்ள முடியும்.
மேலும் மாவட்டம் தோறும் ஆட்சியர் அலுவலகங்களில் மாவட்ட பாதுகாப்பு அலுவலர் என்ற ஒரு அதிகாரி உள்ளார். இந்த பாதுகாப்பு அலுவலரை அணுகுவதன் மூலம் பெண்கள் தங்களுக்கு வீட்டில் ஏற்படும் வன்கொடுமைகள் பற்றியும் வரதட்சணை போன்ற பிரச்சனைகளில் கணவர் வீட்டில் இருந்து பெண்ணுடைய உடமை பொருட்களை மீட்பதற்கு வழிவகை செய்து அவர்களுக்கு ஜீவனாம்சம் இருப்பிடம் போன்றவற்றை உறுதிப்படுத்த உதவிகள் பெற்றுக்கொள்ள முடியும். இது போன்று பெண்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்படும் போது அதற்கான தீர்வை மேற்கொள்ள அரசு இது போன்ற அமைப்புகளை உருவாக்கி நடைமுறைபடுத்தியுள்ளது” என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.