முத்துவும் அந்த இரண்டு அதிகாரிகளும் அந்த பணக்காரர் வீட்டிற்குள் சென்றபோது முத்துவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் போன்று அச்சு அசலாக நின்று கொண்டிருந்த வாகனம் முறையாக பராமரிக்கப்பட்டு புதிதாக தொழிற்சாலையில் இருந்து வெளிவந்த வண்டி போல் பல பல வென மின்னியது.
அந்த வாகனத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த முத்துவை பார்த்த அந்த பணக்காரர் “என்ன சார் இவ்வளவு ஆர்வமா பாக்குறீங்க ஒரு ரைடு போறீங்களா” என்று கேட்டார்.
“இந்த வண்டி ஓடுமா” என்று கேட்ட முத்துவிடம் அந்த பணக்காரர் “ஓடாது சார்.. ஆனால் பறக்கும் வாங்க போகலாம்” என்று கூறிவிட்டு தன் வேலைக்காரரிடம் காரின் சாவியை எடுத்து வர சொன்னார்.
“ஓட்டுவதற்கு முன்னால் இந்த வண்டியோட இஞ்சின் பாகத்தை நான் பார்க்கலாமா” என்று கேட்டார் முத்து.
“ஓ தாராளமா பாக்கலாம் இதுல என்ன இருக்கு, வாங்க” என்று அழைத்துச் சென்று இன்ஜின் இருக்கும் காரின் முன் பகுதியை திறந்தார் அந்த பணக்காரர். உள்ளே பார்த்தவுடன் புன்னகைத்த முத்து, அந்த இரு அதிகாரிகளையும் அருகே அழைத்து “சார் இது என்னன்னு தெரியுமா” என்று கேட்டார்.
திரு திருவென முழித்த அந்த இரு அதிகாரிகளும் “நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியல சார்” என்றனர்.
“பழைய மாடல் வண்டி. ஆனால் இதற்குள் இருக்கும் இஞ்சின் வேறு ஒரு புதிய ரக அதிசக்தி கொண்ட இன்ஜின் ஆகும்” என்றார். உடனே அந்த இரு அதிகாரிகளும் அந்த பணக்காரரை திரும்பிப் பார்த்தனர். அவரும் “ஆமாம் சார்.. கரெக்டா சொல்றீங்க. பழைய இன்ஜின் ஓடாமல் நின்னு போச்சு.. அதனால புது எஞ்சின் மாட்டி ரெடி பண்ணி வச்சிருக்கேன்” என்றார்.
“இதுல என்ன சார் இருக்கு” என்று கேட்ட அந்த அதிகாரிகளில் ஒருவரை பார்த்து புன்னகைத்த முத்து “சார் கேஸ் ஃபைலில் இருக்கிற அந்த டைமிங்ல கண்டிப்பா இந்த வண்டி ஓட முடியும். ஆனால் எல்லாராலும் இத ஓட்ட முடியாது. இதற்கு ஒரு திறமையான வாகனத்தை திறம்பட கையாள தெரிந்த ஒரு ஓட்டுனரால் மட்டுமே கண்டிப்பாக இது சாத்தியப்படுத்த முடியும்” என்று கூறிவிட்டு மீண்டும் அந்த பணக்காரரை பார்த்த முத்து “சார் வீட்டை சுத்தி ஒரு ரவுண்டு போலாமா” என்று கேட்டார். “உட்காருங்க போலாம்” என்று ஏறி அமர்ந்தார் பணக்காரர். முத்துவும் மற்ற இரு அதிகாரிகளும் உள்ளே சென்று அமர அந்த வாகனம் வீட்டை இருமுறை சுத்தி வந்தது.
வண்டியில் இருந்து இறங்கியதும் சம்பவத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்ட அந்த அதிகாரி “சார் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த வண்டியை நான் பிடிக்கும் போது சத்தம் கூட ஓரளவுக்கு இதே போல தான் கேட்டது. ஆனால் அந்த வயதான பாட்டியால் எப்படி இவ்வளவு வேகமாக ஓட்டி இருக்க முடியும்?! மேலும், நான் அவர்களை சோதனைக்கு நிறுத்தும்போது அந்த வாகனம் மிகவும் மெதுவாக தான் வந்தது” என்றார்.
உடனே குறுக்கிட்ட மற்றொரு அதிகாரி “இதைப் பற்றி நாம் அப்புறம் பேசுவோம்” என்று கடிந்து கொண்டார். மூவரும் அந்த பணக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் கொடுத்த தேநீர் உபசரணையை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
மறுமுனையில் வீட்டிலிருந்த ஜானுக்கு எந்த விதமான அழைப்பும் வரவில்லை என்பதால் பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் மனைவியுடன் சேர்ந்து அமர்ந்து அவசரம் இல்லாமல் நிம்மதியாக தனது காலை உணவை முடித்தார்.
“எக்ஸ்க்யூஸ் மீ மே ஐ கம் இன்?” என்று கேட்டுவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தார் ஜான். ஜான் இவ்வாறு கேட்டதும் கிறிஸ்டினாவிற்கு குபீரென சிரிப்பு வந்தது.
ஜானை திரும்பி பார்த்த கிறிஸ்டினா “என்னாச்சு உங்களுக்கு” என்று சிரித்தவாரே கேட்டார். “ஒன்னும் இல்ல டீனா யாராவது திருடன் வந்துட்டான்னு நீ பயந்து கத்திடினா என்ன பண்றது அதான் பர்மிஷன் கேட்டு உள்ளே வந்தேன்” என்றார் ஜான். மீண்டும் சிரித்த கிறிஸ்டினா “ஜான் இது பிளர்ட் பண்ற வயசு இல்ல ஞாபகம் இருக்கா” என்று கேட்டார்.
கிறிஸ்டினாவின் அருகே வந்து தோள்களில் கை போட்டுக் கொண்ட ஜான் “ரொம்ப நல்லாவே ஞாபகம் இருக்கு டீனா. உனக்கு ரொம்ப நல்லா தெரியும். நீ எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. வேலை வேலைன்னு ஓடிட்டு திரும்பி பார்த்தா இங்க வந்து நிற்கிறோம். இனிய வாழ்நாளில் இருக்கிற கொஞ்ச நாளையும் என்னால கண்டிப்பா வேஸ்ட் பண்ண முடியாது. கிடைக்கிற ஒவ்வொரு நொடியும் நான் உபயோகப்படுத்திக்கணும்னு ஆசைப்படுகிறேன்” என்று ஜான் கூறியதும் பாத்திரம் விளக்குவதை ஒரு நொடி நிறுத்திய கிறிஸ்டினா, ஜானின் கண்களை பார்த்து “என்ன ஜான் இப்படி எல்லாம் பேசுறீங்க எனக்கு அழுகை வருது” என்றார்.
“அப்ப நான் எதுவும் பேசக்கூடாதுன்னா நானும் பாத்திரம் விளக்குவேன்” என்று ஜான் கூறியதும் மீண்டும் கிறிஸ்டினாவிற்கு சிரிப்பு வந்தது. “அதெல்லாம் நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். பேசாம நில்லுங்க” என்று கூறிவிட்டு நொடி பொழுதில் பாத்திரங்களை துளக்கி அடுக்கி வைத்தார் கிறிஸ்டினா. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜான் தன்னுடன் நேரம் செலவழிப்பதை கிறிஸ்டினாவும் விரும்பி இருந்தார்.
ஜான் தனது மனைவியின் மீது கொண்ட அலாதியான அன்பை பெருமளவில் வெளிப்படுத்தியதில்லை என்றாலும். ஜானையும் அவரது அன்பையும் 100% புரிந்து கொண்ட கிறிஸ்டினாவும் அவற்றை எதிர்பார்த்ததில்லை. ஆனால் இவற்றை அலாதியாக எதிர்பார்த்து இருந்த தனது மகள் தற்போது உயிரோடு இல்லை என்பது எண்ணி கிறிஸ்டினா மிகவும் வேதனை பட்டார். மறுமுனையில் முத்துவும் அந்த இரண்டு அதிகாரிகளும் அந்த பணக்காரர் வீட்டிலிருந்து புறப்பட்டு சுமார் 2 மணி நேரம் பயணித்து உணவருந்துவதற்காக வண்டியை நிறுத்தினர்.
வண்டியில் இருந்து இறங்கிய முத்து அந்த இரு அதிகாரிகளிடமும் தனக்கு பசி இல்லை என்றும் இந்த வழக்கு குறித்து தான் நாளை கமிஷனர் அலுவலகத்தில் சந்திப்பதாக கூறிவிட்டுவீட்டிற்கு புறப்பட ஆயத்தமானார்.
“சார் நில்லுங்க ஒரு நிமிஷம்” என்று அதிகாரிகளில் ஒருவர் முத்துவை நிறுத்தி “இந்த வழக்கு தொடர்பா நாம வேறு எங்கும் வெளியில் பேசக்கூடாது என்பது நமக்கு இருக்கும் கட்டளை. ஆகவே இது தொடர்பாக நாளை மறுதினம் மீண்டும் இதே இடத்தில் சந்திக்கலாம். அதற்குள்ளாக நாங்கள் இது நாள் வரை இந்த வழக்கு தொடர்பாக சேகரித்த அனைத்து தகவல்களையும் தயார் செய்து எடுத்து வருகிறோம். நாளை மறுதினம் உங்களை இதே இடத்தில் சந்திக்கிறோம்” என்று கூறி இருவரும் புறப்பட்டு சென்றனர்.
சில நாட்களாக வெளியே உள்ள உணவகங்களில் உணவருந்தி கொண்டிருந்த முத்து தனது குடும்பத்தார் வந்து விட்ட காரணத்தினால் உணவருந்துவதற்காக வீட்டை நோக்கி புறப்பட்டார்.
(தொடரும்…)