அன்னைக்கும் தந்தைக்கும் பின்
அம்மாவும் ஐயாவும் என்றாகுபவர்கள்..
வெற்றுக் கிறுக்கல்களை எல்லாம்
வெள்ளைத்தாளில் எழுத்துகளாக்குபவர்கள்..
அர்த்தமற்ற உளறல்களை எல்லாம்
அர்த்தமுடைய பாடல்களாக்குபவர்கள்..
அறிந்திடாத புதியதோர் உலகினை
அறிவுச்சாளரம் திறந்து காட்டுபவர்கள்..
உணர்ந்திடாத பூட்டப்பட்ட திறமைகளை
ஊக்கச்சாவிக் கொண்டு திறப்பவர்கள்..
ஒழுக்கமற்ற களைச்செயல்களை எல்லாம்
கண்டிப்பு கருணையால் கிள்ளுபவர்கள்..
ஆரம்பப் பள்ளியின் வகுப்பறையில்
நம் வாழ்வின் ஆரம்பத்தைத் துவக்குபவர்கள்..
பாடங்கள் திட்டங்கள் மட்டுமல்லாது
மானுடம் மதிப்புகள் போதிப்பவர்கள்..
மதிப்பெண்கள் தேர்வுகள் தாண்டி
மாணவர்களைச் சிந்திக்க வைப்பவர்கள்..
வெற்றிப்பாதைகளுக்கு வழி காட்டுவதோடு
தோல்விகளையும் சந்திக்கத் திடப்படுத்துபவர்கள்..
அறியாமைக் கடலில் கரையேற
அறிவுப்படகைச் செலுத்தக் கற்றுத்தருபவர்கள்..
பல விளக்குகளை உயரத்தில் ஏற்றி வைத்தாலும்
தீக்குச்சி தேவதைகளாக மறைவிலேயே ஒளிருபவர்கள்..
நல்லமரம் நல்விதையின் ஆதாரம்..
நற்சமூகம் நல்லாசிரியர்களின் ஆதாரம்..
அன்னை வழி தந்தையை அறியலாம்..
நல்லாசிரியர் வழி ஆண்டவனை அடையலாம்!!
– மீனாட்சி வெங்கடேஷ்