திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் குறித்து போக்சோ கமிட்டி (Pocso Committee) மற்றும் சிறார் நீதிக்குழுமத்துடன் (Juvenile Justice Committee) கலந்தாலோசனை கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையரக கூட்ட அரங்களில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் எண்ணிக்கை உயர்ந்து வருதை தடுக்க வேண்டும் எனவும், அண்டை வீட்டார், திருமணம் செய்து கொள்வதாக பொய்யான உறுதிமொழி கொடுப்போர் மற்றும் தெரிந்த நபர்கள் ஆகியோர்களே பெருவாரியான போக்சோ வழக்குகளின் குற்றவாளிகளாக உள்ளார்கள் எனவும், போக்சோ வழக்குகள் நீதிமன்றங்களில் தள்ளுபடியாகும் பட்சத்தில் வழக்குகளின் மேல்முறையீடு குறைவாக உள்ளதாகவும், அற்கான காரணங்களை உடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், போக்சோ வழக்குகளை காவல்துறையினர் தீவிர அக்கறையுடன் கையாள வேண்டும்,
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க துறைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை போக்க வேண்டும் எனவும், மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருட்களின் தீமைகள் தொடர்பாக பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட வேண்டும் எனவும், அனைத்து மகளிர் காவல் நிலையம் உட்பட அனைத்து காவல்துறையினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், காவல்துறையும், சமூக பாதுகாப்புதுறையும் இணைந்து இணக்கமுடன் பணியாற்ற வேண்டும் எனவும் மற்றும் குழந்தைகள் நலன் காவல் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்குதல் மற்றும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு கூட்டம் நடத்த வேண்டும் என கலந்தாலோசிக்கப்பட்டது.