தஞ்சையில் கீழே கிடந்த இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 பேரை பாராட்டி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து. பணம் வெகுமதி வழங்கினார்.
தஞ்சையில் உள்ள ஜோயாலுக்காஸ் நகை கடையில் பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த அஜ்மல், நவின், ஜஸ்வின் ஆகிய 3 பேரும் 31ம் தேதி இரவு பணியை முடித்து விட்டு உணவருந்த பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று உள்ளனர். அப்போது சாலையில் தங்க நிறத்தில் காப்பு கிடந்ததை கண்டு எடுத்தனர். நகைக்கடையில் பணிபுரிவதால் தாங்கள் எடுத்தது தங்கம் என்பதை அறிந்து உடனடியாக தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சந்திராவிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் 2ம் தேதி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் டிபன் சென்டர் நடத்தி வரும் கரந்தையை சேர்ந்த தாமரை செல்வன் என்பவர் தான் புதிதாக வாங்கிய இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 சவரன் தங்க காப்பு தவறி கீழே விழுந்து விட்டது என ரசீதுடன் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து ஜோயாலுக்காஸ் பணியாளர்கள் கண்டெடுத்து கொடுத்த தங்க காப்பு தாமரை செல்வன் உடையது என்பதை காவல் ஆய்வாளர் சந்திரா உறுதி செய்தார்.
இதனை அடுத்து, தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் தஞ்சை நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா தங்க காப்பை நகைக்கு சொந்தக்காரரான தாமரை செல்வனிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து ஜோயாலுக்காஸ் பணியாளர்கள் 3 பேரின் நேர்மையை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். காவல் ஆய்வாளர் சந்திரா 3 பேருக்கு பணம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.