காதர் கமிஷனர் அலுவலகத்தில் மற்றொரு அதிகாரியிடம் நடந்ததை கேட்டுக் கொண்டிருக்கையில் கமிஷனர் தொலைபேசி சிணுங்கியது. போனை எடுத்து ‘ஹலோ’ என்றார் கமிஷனர். மறுமுனையில் பேசிய நபர் “சார் என்ன நீங்க அலச்சி இருந்ததா செய்தி வந்துச்சு” என்றார். அந்த குரலை கேட்டதும் கமிஷனரின் முகத்தில் புன்னகை பூத்தது. தொடர்ந்து பேசிய கமிஷனர் “சார் உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன், நேர்ல பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன். மத்த விஷயங்கள் நேர்ல பேசிப்போம் எப்போ மீட் பண்ணலாம்? எங்க மீட் பண்ணலாம்னு மட்டும் சொல்லுங்க என்றார்.
மறுமுனையில் பேசிய நபர் “உங்களை பற்றியும் கேள்விப்பட்டு இருக்கேன் சார், உங்களோட வேலை பார்க்க போறது ரொம்ப சந்தோசம். பின் கதவு சாத்தியிருந்தால் மட்டுமே சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். சந்தோஷம் வந்தவுடன் சந்தோஷத்துடன் வெளியேறினால் அதோடு பயணிக்கலாம். பத்தில் பாதி எட்டு கருமை நிறம் வந்தால் ஒளி ஒன்று பாதையை நடக்கும். நேரில் பேசுவோம்” என்று அழைப்பை துண்டித்தார் அந்த நபர். தொலைபேசியை கீழே வைத்துவிட்டு தனது உதவியாளரை அழைத்தார் கமிஷனர். “சார்” என்று உள்ளே நுழைந்த உதவியாளரிடம் “டாக்குமெண்ட் ரூம்ல கொஞ்சம் முன்னாடி இங்க வந்து போனவர் இருப்பார், அவரை உடனே அழைத்துக் கொண்டு வாருங்கள் வெளியே கிளம்ப வேண்டும்”. என்று கூறிவிட்டு புறப்பட ஆயத்தமானார் கமிஷனர். இரண்டு இரண்டு படிகளாக தாண்டினால் வேகம் பத்தாது என்று மூன்று படிகளாக தாண்டி தாவி குவித்த கமிஷனரின் உதவியாளர் கண நேரத்தில் காதர் இருக்கும் இடத்தை அடைந்தார்.
காதர் மூச்சு வாங்கிக் கொண்டிருந்த உதவியாளரை குழப்பத்தோடு பார்த்து “என்னாச்சு சார்” என்றார். பேச முடியாமல் “சார் கூப்பிட்டார்” என்று கை அசைவில் வெளியே போக சைகை செய்தார் கமிஷ்னரின் உதவியாளர். குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்த காதரின் முகம் என்று தெளிவானது. “நீங்க முன்னாடி போங்க, ஒரே நிமிஷத்துல வரேன்” என்று கூறிவிட்டு அருகில் அமர்ந்து இருந்த மற்றொரு அதிகாரியை பார்த்து “மிஸ்டர் டிடெக்டிவ் இஸ் ஆன் டியூட்டி!. கேஸ் பத்தின எல்லா டீடைலையும் பண்டில் பண்ணி பத்திரமா சரியா எடுத்து வைத்திருங்கள். நான் வந்தவுடன் எனக்கு தேவைப்படும்” என்று கூறிவிட்டு உதவியாளரை விட வேகமாக கார் நோக்கி பறந்தார் காதர்.
காரில் ஏறி புறப்பட தயாராக இருந்த கமிஷனர் காதரை பார்த்ததும் கையில் இருந்த ஒரு சீட்டை நீட்டி “காதர் முக்கியமான விஷயமாக வெளிய போறேன். காலையில் ஒரு ஓட்டலில் நடந்த மர்டர் கேஸ் ஒன்று, அட்ரஸ் இந்த ஸீட்ல இருக்கு அது போய் என்ன கொஞ்சம் உடனடியா பார்த்து அட்டென்ட் பண்ணுங்க. நான் இனிமேல் நாளைக்கு தான் வருவேன்” என்று கூறிவிட்டு அருகில் இருந்த தனது உதவியாளரிடம் வண்டியை எடுக்க சொன்னார்.
நம்மையும் அழைத்து செல்வார் என்று ஆவலோடு அவசர அவசரமாக ஓடி வந்தத காதருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இருப்பினும் புதிய சவால்களை ஏற்றுக் கொள்ள காதர் எப்போதும் தயங்கியதில்லை என்றதால் கமிஷனரிடம் சீட்டை வாங்கிக் கொண்டு எஸ் சார் என்று சல்யூட் அடிப்பதற்குள் வாகனம் புறப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் கொலை நடந்த இடத்திற்கு சென்ற காதர் அங்கு விசாரனை பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டரிடம் சென்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இறந்து போன பெண் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் வழக்கு விரைவாக முக்கியத்துவம் பெரும் என்பது காதருக்கு நன்றாக தெரியும். ஆகவே குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற முனைப்பு காதருக்கு சம்பவ இடத்தை பார்க்க தூண்டியது. இன்ஸ்பெக்டருடன் சம்பவம் நடந்த அறைக்குள் நுழைந்த காதர் கேட்ட முதல் கேள்வி “தடயவியல் துறை வந்தாகி விட்டதா?” என்பது தான்.
“இல்லை சார், இன்னும் வந்து சேரவில்லை. இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்கள்” என்று இன்ஸ்பெக்டர் கூறியதும். “சரி அவர்கள் வந்த பிறகு மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம். முதல் கட்ட புலனாய்வு விசாரணையில் தெரிந்தது என்ன என்று கேட்டார் காதர். “சார், பின் பக்க கதவு வழியாக வந்த கொலைகாரன் உறங்கிக் கொண்டிருந்த இந்த பெண்ணை கொலை செய்துவிட்டு வந்த வழியே தப்பி சென்றிருக்கிறார்”. மேலும் அக்கம் பக்கம் உள்ளவர்களை விசாரித்ததில், யாருக்கும் எந்த சத்தமும் கேட்கவில்லை என்றும், அறையின் பின்பக்கம் ‘கார்டன் வேலைகள்’ மற்றும் ‘பெயிண்டிங்’ நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சிசிடிவி கேமராக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதுவரை எந்த தடையுமும் கிடைக்கவில்லை என்றும் கூறினார் இன்ஸ்பெக்டர். “மற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவிகளின் கதி என்ன?” என்று கேட்டார் காதர். “அதெல்லாம் செக் பண்ணியாச்சு சார் அந்த பெண் கடைசியாக இந்த அறைக்குச்சென்று கதவு சாத்தும் வரை எந்தவிதமான சந்தேகப்படும் நடவடிக்கையும் இல்லை” என்று கூறிய இன்ஸ்பெக்டரிடம் “அதை நான் ஒரு தடவை பார்க்கலாமா?” என்று கேட்டார் காதர்.
“வாங்க சார்” என்று அந்த ஹோட்டலில் மேனேஜர் அறைக்கு கூட்டி சென்றார் இன்ஸ்பெக்டர். மேனேஜர் பார்த்து “அந்த அரை பின்னால் வேலை செய்பவர்களுடைய பெயர் பட்டியல் மற்றும் இதை எந்த நிறுவனம் ஏற்று உங்களுக்கு செய்து தருகிறது போன்ற தகவல்கள் அனைத்தும் தெரிந்தாக வேண்டும்” என்று காதர் கூறியதும். “சார் அதெல்லாம் இன்ஸ்பெக்டர் சார் கேட்ட உடனே கடந்த ஒரு வாரமாக இங்கு வேலை செய்த அனைவரின் பெயர் மற்றும் புகைப்பட பட்டியலை தயார் செய்ய சொல்லி விட்டேன். இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடும்” என்றார் மேனேஜர். இன்ஸ்பெக்டரை பார்த்து புன்னகைத்த காதர் “வெரி குட்” என்று கூறிவிட்டு “அக்கம் பக்கம் அறையில் இருப்பவர்களை இங்கு அழைத்து வாருங்கள் நான் மீண்டும் விசாரிக்கிறேன் உங்களிடம் கூறிய தகவல்களுக்கும் என்னிடம் கூறும் தகவல்களுக்கும் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்று பார்க்கலாம். அதன் மூலமாக ஏதாவது துப்பு கிடைப்பதற்கு நமக்கு வாய்ப்பு உள்ளது” என்றார். ஓகே சார் என்று சலியூட் அடித்துவிட்டு மேனேஜர் அறையை விட்டு வெளியேறினார் இன்ஸ்பெக்டர்.
சிசிடிவி காட்சிகளை எடுக்க முற்பட்ட மேனேஜரிடம் காதர் “சார் இதை பார்க்கிறதுக்கு முன்னாடி பேசலாம் உக்காருங்க” என்று மேனேஜரை அமர வைத்தார்.
“சொல்லுங்க சார் உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்” என்ற மேனேஜரிடம் “பொதுவா ஒருத்தருக்கு ரூம் எப்படி நீங்க அலாட் பண்ணுவீங்க?. ஏனென்றால் எனக்கு தெரிந்தவரை எந்த வெளிநாட்டினாரும் தரைத்தளத்தில் தங்க விரும்பியதாக கேள்விப்பட்டதில்லை. எட்டு மாடி கொண்ட உயரமான கட்டிடத்தில் எதற்காக அந்த பெண்ணிற்கு தரைதளத்தில் அறை ஒதுக்கப்பட்டது? என்று கேட்டார் காதர்..
(தொடரும்…)