தமிழ்நாடு அரசு கந்து வட்டி பிசினஸ் செய்வோரை ஒடுக்க கடுமையான உத்தரவு பிறப்பித்த உடன் அவர்கள் தங்கள் தொழிலை காப்பாற்றிக் கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஆடவர் – மகளிர் சுய உதவிக் குழு எனும் பெயரில் மிகவும் நலிவடைந்த பாமரப் பொதுமக்கள் பயனடையும் வண்ணம் தங்களின் அத்தியாவசிய குடும்பத் தேவைகளுக்காகாகவும் அவர்களின் குடும்பத்தினரின் திறமை அறிந்து சுயதொழில் வாய்ப்புக்களுக்காக ஆடவர் – மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மூலதனத்தை வங்கிக் கடன் மூலம் பெற்று பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அரசால் திட்டம் வகுக்கப்பட்டு நமது தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தனியார் நிதி நிறுவனங்களான கிராம வெளிச்சம், உஜ்ஜீவன், லி&ஜி, கிராம விடியல், ஆசிவாதம், சூர்யா டே மற்றும் பல பெயர்களில் இயங்குகின்ற இந்த தனியார் நிறுவனங்கள் தற்போது கந்து வட்டி தொழில் செய்யாமல் முடங்கி கிடப்போரிடம் பேரம் பேசி குறைந்த வட்டிக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு அப்பணத்தை ஆடவர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதலீடு செய்து நவீனமான முறையில் மைக்ரோ பைனான்ஸ் என்ற முறையில் பல கூலித் தொழிலாளர்களை அவர்களின் அன்றாட வருமானத்தில் கை வைத்து பணம் சம்பாதிக்க நவீன உத்தியோடு மைக்ரோ பைனான்ஸ் எனும் கந்து வட்டிக் கடையை விரித்துள்ளனர்.
இவர்கள் ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு பணம் வழங்குவதில்லை. 10 பெண்களை ஒருங்கிணைத்து முதலில் தலா 20,000 ரூபாய் கடனாக வழங்குகிறார்கள். அந்த தொகை 52 வாரத்திற்கு அசலும் வட்டியும் சேர்த்து வாரம் ரூ.625/= செலுத்தச் சொல்கிறார்கள் – அதன் விபரம் பின் வருமாறு.
52 வாரம் வூ வாரம் 625 ரூபாய் = 32,500 மொத்தம் செலுத்தும் தொகையாகும். இவர்கள் செலுத்துகின்ற இந்தத் தொகைக்கு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் மூலம் இரசீதோ – பாஸ் புத்தகமோ வழங்கப்படுவதில்லை. கடன் வாங்கிய இந்த குழுவில் உள்ள யாரவது ஒருவர் வீட்டில் சாவு விழுந்து இருந்தால் கூட அவர் பணம் செலுத்த வேண்டும்.
தவறினால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் வசூலிக்க என நியமிக்கப்பட்ட நபர்களோடு வந்து இழவு வீட்டில் அசிங்கப் படுத்தப்படுவார்கள். அத்துடன் அவர் விடுவதில்லை மீதம் உள்ள 9 பேரும் அந்த ஒருவர் பணத்தை சேர்த்து கட்ட வேண்டும் என நிர்பந்தம் செய்யப்பட்டு மிகவும் கறாராக பணத்தை வசூலிக்கின்றனர். இது துவக்கம்.
20,000 கட்டி முடித்த உடன் 40,000 என கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது. 40,000த்திற்கு அசலும் வட்டியும் சேர்த்து 2 வருடங்களுக்கு வாரம் 490 வீதம் கட்ட வேண்டும். ஒரு நாளைக்கு 100, 150 ரூபாய்க்கு கூலிக்கு வேலை செய்யும பெண் வாரம் 600 ரூபாய் கடன் கட்ட நிர்பந்திக்கப்படுகிறார்.
கணவன் மனைவி 2 பேரும் வேலைக்கு செல்லும் குடும்பத்தில் இது பெரிய பாரம் இல்லை. ஆனால், கணவனை இழந்த, (கணவன் இருந்தும் இல்லாத) குழந்தைகளை வளர்த்து வரும் பெண்களால் வாரம் ரூ 600 எப்படி கட்ட முடியும்…?
வேலை இல்லாத வாரங்களிலும், பண்டிகை, விடுமுறை வாரங்களிலும் கூட கட்டாயம் பணம் கட்டியே ஆக வேண்டும். இல்லையெனில் அவர்களை இரவு பகல் பார்க்காமல் வீட்டு வாசலில் நின்று அசிங்கமாக பேசுவார்கள். (கந்து வட்டிக்காரன் கூட வேலையில்லை அடுத்த வாரம் தருகிறேன் என்றால் போய் விடுவான்)
இதனால் குழுவுக்கு பணம் கட்ட வேண்டும், என்று அக்கம் பக்கம் உள்ளவர்களிடமும், தெரிந்தவர்களிடமும் கடன் வாங்குகிறார்கள்.ஏற்கனவே வாங்கிய கடனுடன் இந்த கடனும் சேர்வதால், வேறு 10 பெண்களுடன் சேர்ந்து வேறு நிதி நிறுவனத்தில் குழு கடன் பெறுகிறார்கள்.
2, 3 நிதி நிறுவனங்களில் 20000, 40000 என 1 லட்சம் வரை ஒரு பெண் கடன் பெறுகிறாள். வாங்கிய கடனுக்கு.. 1 வாரத்திற்கு, 1 குழுவிற்கு ரூ 600 வீதம்… 3 குழுவிற்கு 1,800 முதல் 2,000 ரூபாய் வரைஒரு பெண் கடன் கட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
கூலி வேலை செய்யும் ஒரு பெண் வாரம் ரூ 2,000 எப்படி கட்ட முடியும்? குழு பணம் கட்ட வேண்டும் என்று பெண்கள் வீடு வீடாக சென்று பிச்சை எடுக்காத குறையாகவும் பிச்சை எடுத்தும் பணம் கட்டுகிறார்கள். பணம் கட்டவில்லை என்றால் மற்ற 9 பெண்களும் சேர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கண்டபடி திட்டுகிறார்கள்…(மேலே கூறியுள்ளவை அனைத்தும் நம் அக்கம் பக்கத்து வீடுகளில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள்….)
எத்தனை நாளைக்கு இப்படி அடுத்தவர்களிடம் பிச்சை எடுப்பது, திட்டுவாங்குவது என நினைத்து விரக்தியில் இருக்கும் பெண்கள், எடுக்கும் முடிவு விபரீதமாக மாறுகிறது. அந்த பெண்ணுக்கு நாள் ஒன்றுக்கு கடன் கட்ட ரூ500 தேவைப்படுகிறது. சில பெண்கள் தற்கொலை செய்ய துணிகிறார்கள், இவர்களின் தற்கொலைகளும் குடும்ப சூழ்நிலைகளால் காவல்துறை மூலம் பதிவு மேற்கொள்ளப்படுவதில்லை.
மேலும் இந்த மைக்ரோ பைனான்ஸ் கந்துவட்டி குறித்தும், செலுத்திய பணத்திற்கு இரசீது – பாஸ் புத்தகம் வழங்காதது குறித்தும், இன்னும் இவர்கள் அக்கிரமங்கள் குறித்தும் காவல் நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் வழங்கும் போது இவர்களுக்கு பைனான்ஸ் வழங்கும் கந்து வட்டி கும்பல் காவல்துறையை திணற திணற கவனித்து விடுகின்றனர். அதன் பின்னர் கடன் பெற்றவர்கள் கூடுதலாக போலீஸாரின் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
அந்த குழுவில் உள்ள 10 பெண்களில் ஒருவர் சுய உதவிக் குழு தலைவியாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திற்கு விசுவாசம் உள்ளவர்களை நியமிக்கின்றனர். இந்த கந்து வட்டி பணத்தை வசூலிக்க இவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
இதை குழுத் தலைவி தானே நேரடியாகவோ அல்லது வேறு யாராவது ஒருபெண் மூலமாக இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கடன் பெற்ற பெண்மணிக்கு அவர்கள் தவறான வழி காட்டுகிறார்கள். வேறு வழியில்லாமல் இதன் மூலம் பெண்கள் விபச்சாரம் பெருகுகிறது.
ஆம் அவள் பணத்திற்காக தன்னையே விற்க கூடிய சூழ்நிலையில் தவறான வழியில் பணம் சம்பாதிக்க தன்னை தயார்படுத்தி கொண்டு தடம் மாற்றப்படுகிறார்.
நான் மேலே கூறியுள்ளவைகள் அனைத்தும் நம்மை சுற்றி தினமும் நடக்கும் உண்மையே.யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை.
நம் ஊரில் நம் கண் முன்னேலேயே பல பெண்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டுள்ளார்கள். இந்த அவலம் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. ஆனால் அரசுத்துறை இந்த மைக்ரோ பைனான்ஸ் குற்றங்களை பற்றி கண்டு கொள்வதே இல்லை.
இவற்றை எங்களது பாதிக்கப்பட்டோர் கழகம் மிகக் கடுமையாக எதிர்க்கிறது. தற்போது தான் 3 இலக்க லாட்டரி சீட்டு மூலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு குடும்பமே தற்கொலை செய்துள்ள வடுவே இன்னும் ஆறாத நிலையில் இது போல மைக்ரோ பைனான்ஸ் மூலம் தற்கொலை சாவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறோம்.
ஆகையால் இது குறித்து ஆய்வு செய்து தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு நேரடியாக வங்கி மூலம் கடன் வழங்கவும், அவர்கள் பாதுகாப்புடன் வாழவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க ஆவன செய்ய வேண்டி மிகவும் பணிவோடு வேண்டுகிறோம்.