தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பெரியகோட்டை குறுவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் நில அளவையர் கடந்த 02.03.2024 அன்று பெரிய கோட்டை கிராமத்தில் நில அளவை சம்பந்தமாக பெறப்பட்ட மனுவின் பேரில் எல்லை அளவை மேற்கொண்ட பொழுது குறிப்பிட்ட மனுதாரரின் உறவினரான முருகானந்தம் மற்றும் அவரது மனைவி செல்வகுமாரி என்பவர் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் பெண் நில அளவையர் என்றும் கூட பாராமல் தகாத வார்த்தையால் பேசி வரம்பு மீறிய செயலாக தனது கடமையை நிறைவேற்ற வந்த பெண் நில அளவையரை கடுமையாக தாக்கி உள்ளார்கள்.
அதைத்தொடர்ந்து செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் பட்டுக்கோட்டை வருவாய் அலுவலகம் முன்பு இந்த சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை அடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்தின் கட்டுப்பாட்டை கொண்ட மதுக்கூர் காவல் நிலையத்தில் அந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு நில அளவையர்கள் சார்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில் அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததோடு மட்டுமின்றி அவதூறு வார்த்தைகள் உபயோகப்படுத்தி திட்டியும், அடித்தும் உள்ள சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறையினர் மூலம் பிணையில் வெளிவர முடியாத கடுமையான சட்ட பிரிவின் கீழ் கைது செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதனையடுத்து கந்தர்வகோட்டையில் காவல்துறையினரால் 05.03.2024 அன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நில அளவையருக்கும் மாவட்டம் முழுதிலும் நில அளவை பணி மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்து வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசுத்துறை பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளது தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.