“எங்க ஹோட்டல்ல நாங்க ரூம் அன்லாக் பண்றது நேரடியா வந்து ரூம் கேட்கும் நபர்களுக்கு மட்டும் தான். மத்தபடி ஆன்லைனில் புக்கிங் செய்பவர்கள் எங்கள் வெப்சைட்டில் இருக்கும் போட்டோக்களை பார்த்து அவர்களே முடிவெடுத்துக் கொள்வார்கள் அதனால் ரூம் ஒதுக்குவதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் தரை தளத்தில் உள்ள ரூம்கள் அனைத்தும் பொதுவாக விலை குறைவாக இருக்கும். ஓரிரு நாட்கள் தங்குவோர்கள் மட்டுமே விலை உயர்ந்த ரூம்களை பொதுவாக உபயோகிக்க விரும்புவார்கள். ஐந்து நாட்களுக்கு மேல் தங்கும் நபர்கள் விலையின் காரணமாக பொதுவாக தரைதளம் மட்டுமே உபயோகப்படுத்துவார்கள். மேலும் அவர்கள் முழு நேரமும் ஹோட்டலில் இருப்பதில்லை. பல நேரங்களில் வெளியே தான் இருப்பார்கள்” என்று மேனேஜர் கூறிக் கொண்டிருக்கையில் படபடப்புடன் மேனேஜர் ரூம் கதவை திறந்து உள்ளே நுழைந்தார் ஒரு ஓட்டல் ஊழியர். காவலரை பார்த்ததும் ஒரு நொடி அதிர்ச்சி அடைந்தார். பதட்டத்துடன் மேனேஜரிடம் “சாரி சார் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு” என்று கூறிவிட்டு தனது கைரேகையை செலுத்தி பதிவு செய்துவிட்டு வெளியேறினார்.
அந்த ஊழியர் உள்ளே நுழைந்ததும் பேசுவதை நிறுத்திய மேனேஜர் தற்போது மீண்டும் பேசத் தொடங்கினார் “சார் பொதுவா வெளிநாட்டினருக்கு அரை ஒக்கப்படும் போது நாங்கள் அதை பெரிதும் கவனிக்க மாட்டோம். ஏனென்றால் கலாச்சாரம் மறுபடுதல் காரணமாக அவர்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு வந்து விடக்கூடாது என்பதற்காக வழக்கமாக நாங்கள் செய்யும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் சற்று தளர்த்திக் கொள்வது வழக்கம்.அது போல தான் இந்த பெண்ணும். எப்போதும் வருவது போதுமாக இருப்பதால் நாங்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை”.
மேனேஜர் கூறுவதை கேட்டதும் புருவத்தை உயர்த்திய காதர் “பாதுகாப்பு நடைமுறைகளில் சமரசமா!?. இது சட்டப்படி குற்றம் அது உங்களுக்கு தெரியும் தானே..” என்று கேட்டவுடன் தலை குனிந்த மேனேஜர் “தப்புதான் சார், ஆனா நாங்க ரூல் புக்ல உள்ள எல்லாத்தையும் பாலோவ் பண்ணா இங்க எந்த கஷ்டமரும் வர மாட்டாங்க. அதோட நான் இங்க வெறும் மேனேஜர் வேலை தான் செய்கிறேன். எனக்கு மேல் பொறுப்பில் இருக்கும் அதிகாரி எனக்கு என்ன கட்டளை இடுகிறாரோ அதைத்தான் நான் செய்ய முடியும். எனக்கு வேறு வழியில்லை , மேலும் நாங்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதற்கு இது ஒன்றும் பைவ் ஸ்டார் ஹோட்டல் இல்லை. இங்கே நாங்கள் கராரா இருந்தோம்னா எங்களால் இந்த பிசினஸ ரன் பண்ண முடியாது. மேலும் வெளிநாட்டினார்களுக்கு பொதுவாக இது போன்ற அபரிவிதமான பாதுகாப்பு நடைமுறைகள் பிடிக்காது. அவர்களுக்கு அது பழக்கமும் கிடையாது என்ற காரணத்தால் எங்களோடு தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள்.
இது தேவையில்லாத மனக்கசப்பை தருவதோடு எங்கள் நிறுவனத்தை பற்றி தரக்குறைவாக ஆன்லைனில் பதிவு செய்வார்கள் அது எங்களுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். பல நேரங்களில் நாங்கள் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பதாக எங்கள் மீது பழி போடுவார்கள். பின்பு அதற்கு பிராயச்சித்தமாக ரூம் இலவசமாக வேண்டும் என்று கேட்பார்கள் இல்லை என்றால் புகார் அளித்து பல சிக்கல்களை ஏற்படுத்த மிரட்டுவார்கள் இப்படி. நிலைமை இப்படி இருக்க சட்டப்படி குற்றம் என்றெல்லாம் பார்க்க முடியாது சார். அப்படிப் பார்த்தால் இங்கு பல ஹோட்டல்களை இழுத்து மூட வேண்டியது இருக்கும்” என்றார்.
“ஏன் ரூல்ஸ் ஃபாலோ பண்ணலன்னு கேட்டா சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கீங்க, சரி முதல்ல வீடியோவை காட்டுங்கள் அப்புறம் பேசுவோம்” என்று காதர் கூறிக் கொண்டிருக்கையில் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டர் “சார் அக்கம்பக்கத்தினர் எல்லாம் வெளியில் உள்ளார்கள்” என்று கூறிவிட்டு சல்யூட் அடித்தார். “சரி, எல்லாரையும் ஒவ்வொருத்தரா வர சொல்லுங்க” என்று கூறினார் காதர். “சார் அப்ப இந்த வீடியோ பதிவு?” என்று கேட்டார் மேனேஜர்.
“எனக்கு கண்,காது,வாய் எல்லாம் நல்லாவே வேலை செய்யும். சொல்றத மட்டும் நீங்க செய்ங்க வீடியோ காட்டுங்க. உங்க வேலைய நீங்க பாருங்க சார் எனக்கு என் வேலையை பார்க்க தெரியும்” என்று கடுகடுத்தார் காதர்.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த நபர் “சார்” என்று கூறிவிட்டு வணக்கம் வைத்தார். தலையசைத்த காதர் “இங்க வாங்க இந்த வீடியோவை பாருங்கள்” என்று கூறிவிட்டு மேனேஜர் பின்னால் அந்த நபரை நிற்க வைத்தார் காதர். மூவரும் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு நிமிடம் அமைதியாக இருந்த காதர் திடீரென்று அந்த நபரிடம் “சரி ஏன் அந்த பெண்ணை கொன்னீங்கன்னு சொல்லுங்க” என்றார்.
மேனேஜரும் அந்த நபரும் படபடத்தனர். மேனேஜர் சட்டென்று திரும்பி இருக்கையை விட்டு எழுந்தார். புன்னகைத்த காதர் “சார் பதட்டப்படுறீங்க ,அப்ப உண்மையிலேயே நீங்கதான் கொன்னீங்களா?” என்று கேட்டதும் “எங்களுக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார் மேனேஜர். காதர் மற்றொரு நபரை பார்க்க அவரோ “சார், எனக்கு ஒண்ணுமே தெரியாது காலையில தான் வந்தேன். இப்போதான் எனக்கு விஷயமே தெரியும். நான் என் வீட்டுக்கு தெரியாமல் இங்கு வந்துள்ளேன். சத்தியமா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நேற்று இரவு முழுவதும் நான் வேலையில் இருந்தேன்” என்று கூறிவிட்டு தான் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டையை எடுத்து நீட்டினார். அதை வாங்கிப் பார்த்த காதர் புருவத்தை சுருக்கினார் “அந்த நபரை பார்த்து இந்த ஆபீஸ் இந்த ஊர்ல தான் இருக்கு உங்க அட்ரஸும் இந்த ஊர்ல தான் இருக்கு அப்புறம் எதுக்கு சார் ஹோட்டல்ல வந்து தங்கி இருக்கீங்க”? என்று கேட்டார். தலையை சொரிந்து கொண்டே பேசத் தொடங்கிய அந்த நபர் “சார் எனக்கும் என் மனைவி வீட்டுக்கும் ஆகாது. அவங்க வீட்டிலிருந்து எல்லாரும் வந்திருக்காங்க. நா இருந்தால் ஏதாவது சொல்லி சண்டையில் இழுத்து விட்டு விடுவார்கள். அதான் வெளியூர்ல கான்பரன்ஸ் வேலை இருக்குது என்று பொய் சொல்லிவிட்டு நிம்மதியாக இரண்டு நாள் ஓட்டலில் வந்து தங்கலாம் என்று நினைத்து இங்கு வந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது இதற்கு வீட்டில் இருந்து இருந்தால் கூட பரவாயில்லை என்று”.
அந்த நபர் அதைக் கூறியதும் காதர் தனது பார்வையை மேனேஜர் பக்கம் திருப்பினார். “சரி சார் நீங்க சொல்லுங்க இவர் சொன்னத கேட்டீங்க இல்லயா? “என்று கேட்டார். ஆம், என்று தலையசைத்தார் மேனேஜர். “சரி அப்ப அவர் சொன்னது அப்படியே திருப்பி சொல்லுங்க என்று காதர் கேட்டதும் மேனேஜரின் விழி பெரிதாகி குப்பென்று வியர்த்தது.
(தொடரும்…)