சென்னையில் போக்குவரத்து பெண் காவலர்களின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பயோ – டாய்லெட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சென்னை ரன்னர்ஸ்’ என்னும் தன்னார்வ அமைப்போடு சேர்ந்து முன்னெடுக்கப்பட்ட இந்தமுயற்சியை போக்குவரத்து கூடுதல் ஆணையர் தேவராணி ஒருங்கிணைத்தார்.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் பயோ டாய்லெட் வசதியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும் போது, இந்தியாவில் முதன்முறையாக பெண் காவலர்களுக்கான அதிநவீன பயோ – டாய்லெட் வசதியை அமைத்துள்ளோம். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை சந்திப்பு, விவேகானந்தர் இல்லம், பல்லவன் சந்திப்பு, ஆடம்ஸ் பாயின்ட் (நேப்பியர் பாலம்) ஆகிய 5 இடங்களில் பயோ – டாய்லெட் வசதி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
ஒரு முறை நீர் ஏற்றினால் 10 நாட்களுக்கு பயன்படுத்தும் வகையிலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யும் வகையிலும் பயோ – டாய்லெட் வடிவமைக்கப் பட்டுள்ளது. சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் ஒரு பயோ – டாய்லெட் அமைக்க ரூ.2 லட்சம் செலவாகிறது. இதனை பெண் காவலர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், இணை ஆணையர்கள் மகேஷ்குமார், பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயோ-டாய்லெட் அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி, மின்விசிறி, துணிகளை மாட்டும் வளையம், சோப் வைக்கும் ஸ்டாண்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.