மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்அலுவலகம், இணையவழி நத்தம் பட்டா மாறுதல் திட்டம் உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம்2020-ல் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை அருகேமன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை அருகில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.114.48 கோடிமதிப்பில் தரைத் தளம் உட்பட 8 தளங்களைக் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதியஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது.
இந்த புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் ரூ.423.36 கோடி மதிப்பில்முடிவுற்ற 71 பணிகளை காணொலிவாயிலாக திறந்துவைத்தார். மேலும், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ரூ.88.62 கோடியில் 40 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, 3 மாவட்டங்களையும் சேர்ந்த 12,653 பயனாளிகளுக்கு, ரூ.143.46 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், தஞ்சை மாவட்டத்தில் திருவோணம் புதிய வருவாய் வட்டம் மற்றும் கிராம நத்தம் பகுதிகளுக்கு நத்தம் இணையவழி பட்டாமாறுதல் திட்டத்தை தொடங்கிவைத்தார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றும் அரசாகவும், அரசாணைகளை நடைமுறைப்படுத்தும் அரசாகவும் இந்த அரசுஉள்ளது. நத்தம் பட்டா வாங்குவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, எளிமைப்படுத்தும்வகையில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் என்ற புரட்சிகரமான திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த் துறைவரலாற்றில் கிராமப்புற நத்தம்பட்டா கணினி மூலம் வழங்கப்படுவது இதுதான் முதல்முறை. இதில், முதல்கட்டமாக 75 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.
150-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதியகட்டிடம் கட்டப்படும். சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க கடைமடை நீரொழுங்கிகள் ரூ.44 கோடியில் அமைக்கப்படும். குத்தாலம் வட்டம்கடலங்குடியில் ரூ.2.40 கோடியில் படுகை அணை அமைக்கப்படும். வானகிரி மீன் இறங்குதளம் ரூ.30 கோடியில் மேம்படுத்தப்படும்.
நாகை மாவட்டம் செருதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் ரூ.25 கோடியில் தடுப்புச் சுவரும்,திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரூ.10 கோடியில் மீன் இறங்குதளமும், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ரூ.2.50 கோடியில் உலர் மீன் தயாரிப்பு குழுமமும் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் கேன்.என்.நேரு, எ.வ.வேலு, கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா,எம்.பி. செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா எம்.முருகன், எம்.பன்னீர்செல்வம், எஸ்.ராஜகுமார், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அரசு செயலர்கள் பி.சந்திரமோகன், ராஜாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை நன்றி கூறினார்.