ஏமாற தயாராக இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் கருணையை எதிர்பார்க்காமல் ஆசையை தூண்டி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வரும் மோசடி கும்பல்.
வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசையை தூண்டி வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பது தான் இந்த கும்பலின் பிரதான வேலை. சமீப காலங்களில் எப்படியாவது தனது பண தேவையை தீர்த்து விட வேண்டும் என்று எண்ணி பல வழிகளில் முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்களும் மற்றும் இல்லத்தரசிகளும் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி இலட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
வீட்டிலிருந்தபடியே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி தான் இந்த மோசடி கும்பலால் வீசப்படும் வலை. அதைப் பார்த்து ஆசையால் வலையில் சிக்கி யாராவது அவர்களுக்கு எப்படி இதை செய்வது சொல்லுங்கள் என்று தெரிந்து கொள்ள முற்படும்போது இந்த கும்பலிடம் இருந்து சமூக வலைதள பக்கங்களுக்கான ஏதாவது ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. பிறகு அதில் உள்ள கட்டளையை நிறைவேற்றும்படி கேட்கப்படுகிறது. இதில் பொதுவாக youtube வீடியோவையோ அல்லது டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய வலைதள பக்கங்களில் இருக்கும் வீடியோக்களையும் பார்த்து விட்டதற்கான அத்தாட்சியாக அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதை நம்பி அவர்கள் சொன்னதை செய்த அப்பாவி மக்களிடம் நீங்கள் வெற்றிகரமாக உங்கள் முதல் வேலையை முடித்து விட்டீர்கள் உங்களுக்கான பணத்தை உங்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு விவரங்களை பெற்றுக்கொண்டு அதில் சிறு தொகையாக 100 ரூபாயோ அல்லது 150 ரூபாயோ வரவு வைக்கப்படுகிறது அந்த மோசடி கும்பலால். பணத்தைப் பார்த்ததும் உற்சாகமடையும் நம்ம மக்கள் அடுத்து என்ன வேலை என்று அதை தொடர்ந்து செய்ய முற்படும் போது அடுத்த வேலை வேண்டுமென்றால் ஆயிரம் ரூபாய் பணம் கட்டுங்கள் என்று கேட்கப்படுகிறது. 150 ரூபாய் மூலம் சம்பந்தப்பட்டவரின் நம்பிக்கையை பெற்றுவிட்டபடியால் மக்களும் யோசிக்காமல் ஆயிரம் ரூபாயை அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்கிலோ அல்லது யுபிஐ ஐடி மூலமாகவோ அனுப்பி விடுகிறார்கள். சிறிது நேரத்தில் இரண்டாவது வேலை என்று மேற்கூறியவாறு அனைத்தும் நடைபெறுகிறது. மேலும் உடனடியாக 1150 ரூபாயும் சம்பந்தப்பட்ட நபர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
வேலை இவ்வளவு எளிதாக இருக்கிறது உண்மையிலேயே பணக்காரனாகிவிடலாம் என்று எண்ணி அடுத்தடுத்து அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்துக் கொண்டே இருக்கும் நமது மக்களுக்கு நாம் ஏமாந்து விட்டோம் என்பது அவர்கள் பெருந்தொகையை எடுத்துக்கொண்டு இணைப்பை துண்டித்து அப்ஸ்காண்டாகி விடுவதால் மட்டுமே தெரிய வருகிறது. இவ்வாறு பெருந்தொகையை ஏமாந்து விட்டு செய்வதறியாது சேமிப்பையும் அல்லது கடனாக வாங்கிய தொகையையோ எவ்வாறு திரும்பக் கொடுப்பது என்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் நமது மக்கள்.
ஏமாறாதீர்கள் நம்மை யாரும் ஏமாற்ற அனுமதிக்காதீர்கள் என்று கூறி தஞ்சை மாவட்டம் சைபர் கிரைம் சார்பாக திரு எஸ் ராமதாஸ், துணை ஆய்வாளர்கள் ரோஸ்லின் அந்தோணி அம்மாள், கார்த்திக் மற்றும் சைபர் காவலர் பிரியா அவர்களால் விழிப்புணர்வு வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.